வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் அமைச்சர் பேச்சு 212 நகரும் நியாயவிலை கடைகள் மூலம்

ஆரணி, செப்.25: திருவண்ணாமலை மாவட்டத்தில் 212 நகரும் நியாயவிலை கடைகள் மூலம், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் வினியோகம் செய்யப்பட உள்ளதாக அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் கூறினார். ஆரணி பழைய பஸ் நிலையம் எம்ஜிஆர் சிலை அருகே நேற்று, பொது விநியோக திட்டத்தின் கீழ், குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கே சென்று, அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்யும் வகையில், நகரும் நியாயவிலை கடைகள் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் தூசி கே.மோகன், வி.பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்க தலைவர் ராஜன், கூட்டுறவு பண்டக சாலை தலைவர் கஜேந்திரன், ஆவின் துணைத்தலைவர் பாரிபாபு, கூட்டுறவு சங்கங்களின் மண்டல துணை பதிவாளர் ராஜ்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணை பதிவாளர் காமாட்சி வரவேற்றார்.

இதில், அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் நகரும் நியாயவிலை கடைகளை துவக்கி வைத்து பேசுகையில், `திருவண்ணாமலை மாவட்டத்தில் 1,112 முழுநேர நியாயவிலை கடைகள், 510 பகுதிநேர கடைகள் என மொத்தம் 1,633 நியாயவிலை கடைகள் உள்ளன. இந்த கடைகள் மூலம் 7,47,376 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், பொது விநியோக திட்டத்தின் மூலம், மாவட்டத்தில் 212 நகரும் நியாயவிலை கடைகளில் 25,796 குடும்ப அட்டைதாரர்கள், 13 வாகனங்களில் அவர்களது வீடுகளிலேயே அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்' என்றார்.

நிகழ்ச்சியில், துணை பதிவாளர்கள் சரவணன், ஆரோக்கிய ராஜ், கமலக்கண்ணன், கூட்டுறவு சங்க செயலாளர் வெற்றி, அதிமுக ஒன்றிய செயலாளர்கள் பிஆர்ஜி.சேகர், வக்கீல் சங்கர், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் ஜோதிலிங்கம், நகர செயலாளர் அசோக்குமார், எஸ்வி.நகரம் கூட்டுறவு சங்க தலைவர் பாலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: