கொரோனா முன்னெச்சரிகை திருவெள்ளறை பெருமாள் கோயிலில் இன்று நிலைத்தேர்

மண்ணச்சநல்லூர், மார்ச் 20: மண்ணச்சநல்லூர் அருகே திருவெள்ளறையில் கொரோனா வைரஸ் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இன்று நடைபெறவிருந்த தேரோட்டத்தில் வடம் பிடிப்பு இல்லாமல் தேர் நிலைத்தேராக இருக்கும் என்று தெரிய வந்துள்ளது. ரங்கம் ரங்கநாதர் கோயிலின் உப கோயில்களில் ஒன்று திருவெள்ளறை புண்டரீகாட்சப் பெருமாள் கோயில். இந்த கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெற்று வரும் தேரோட்டம் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் கடந்த 12ம் தேதி தொடங்கியது. விழாவின் 3ம் நாள் திருவெள்ளறை பெருமாளுக்கு ரங்கத்தில் கொள்ளிடக் கரையில் தீர்த்தவாரி நடைபெற்றது. திருவிழாவின் அடுத்தடுத்த நாட்களில் பெருமாள் கற்பக விருட்சம், அனுமந்த வாகனம், கருட வாகனம், ஹம்ச வாகனம், யானை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் புறப்பட்டு திருவீதி உலா நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் இன்று நடைபெறுவதாக இருந்தது. வழக்கமாக திருவெள்ளறை பெருமாள் கோயில் தேரோட்டத்தில் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள தேர் வடம் பிடித்து இழுக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பீதியால் பலவேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு இடத்தில் அதிக அளவில் பொதுமக்கள் கூட வேண்டாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன. இதனால் இந்த ஆண்டு திருவெள்ளறை பெருமாள் கோயிலில் தேர் வடம் பிடித்து இழுக்கப்படாது என்று தெரிய வருகிறது. பெருமாளும், தாயாரும் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளியவுடன் தேர் நிலைத்தேராக இருக்கும். தேர் வடம் பிடித்து இழுக்கப்படாது என்று அறநிலையத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>