கொரோனா வைரஸ் தடுப்பது குறித்து பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு பிரசாரம்

ஈரோடு, மார்ச் 19: கொரோனா வைரஸ் தடுப்பு குறித்து ஈரோடு பஸ் ஸ்டாண்டில் விழிப்புணர்வு பிரசாரம் நேற்று நடந்தது. மாவட்ட நிர்வாகம் சார்பில் கொரோனா வைரஸ் தடுப்பு தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் நோய்தடுப்பு முறைகளை கடைபிடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ஈரோடு பஸ் ஸ்டாண்டில் கொரோனா விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி நடந்தது. இதை கலெக்டர் கதிரவன் துவக்கி வைத்தார். இதில், மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், சுகாதார பணிகள் துணை இயக்குநர் சவுண்டம்மாள், செயற்பொறியாளர் விஜயகுமார், சுகாதார ஆய்வாளர் கண்ணன், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் செல்வன், ரவி, கோவிந்தராஜ் மற்றும் அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். கொரோனா வைரஸை தடுக்க கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முககவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. ஈரோடு பஸ் ஸ்டாண்ட், ரயில் நிலையம், அரசு தலைமை மருத்துவமனை பகுதிகளில் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து மாவட்டம் முழுவதும் ஈரோடு நாடக கொட்டகை கலைக்குழு சார்பில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட உள்ளதாக கலெக்டர் கதிரவன் தெரிவித்தார்.

Related Stories: