வெளிநாட்டு பயணிகளை தங்க வைக்க 2 ஆண்டாக பூட்டிக்கிடக்கும் கள்ளிக்குடி காய்கறி வளாகம் கொேரானா கண்காணிப்பு மருத்துவமனையாக மாற்றம் 75 படுக்கை வசதிகளுடன் சிகிச்சை அளிக்க ஏற்பாடு

திருச்சி, மார்ச் 18: திருச்சி கள்ளிக்குடி அருகே கட்டப்பட்டு காலியாக உள்ள காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளை தங்க வைத்து கண்காணிக்கும் மருத்துவ மையமாக செயல்பட உள்ளது. திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மணிகண்டம் ஒன்றியம், கள்ளக்குடி அருகே ரூ.77 கோடி மதிப்பீட்டில் காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களுக்கான மத்திய வணிக வளாகம் கடந்த 2017ம் ஆண்டு கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இந்த வளாகத்தில் உள்ள 1,000 கடைகளில் 300 கடைகள் மொத்த வியாபாரிகளுக்கு ஒதுக்கப்பட்டது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் உள்ள காய்கறி, பழங்கள், மலர் கடைகள் இங்கு மாற்றம் செய்வதற்காக இந்த வளாகம் கட்டப்பட்டது. மாநகரிலிருந்து 10 கி.மீ., தொலைவில் இருப்பதாக கூறி வியாபாரிகள் அங்கு செல்லவில்லை. யாரும் வாடகைக்கு வராததால் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வளாகம் பயன்பாடின்றி பூட்டியே கிடக்கிறது.

இந்நிலையில், இந்த மார்க்கெட் வளாகம் வெளிநாடுகளிலிருந்து விமானம் மூலம் வரும் பயணிகளை தங்க வைக்கும் மருத்துவ கண்காணிப்பு மையமாக செயல்பட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் அரபு நாடுகளிலிருந்து நாள்தோறும் ஆயரக்கணக்கான பயணிகள் வருகின்றனர். தற்போது கொேரானா வைரஸ் தாக்குதல் காரணமாக, வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்தி கண்காணிக்க ஆங்காங்கே மருத்துவமனை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி கள்ளிக்குடி காய்கறி வளாகம் வெளிநாட்டு பயணிகளை தனிமைப்படுத்தி தங்க வைக்கும் மருத்துவமனையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையத்துக்கு வருபவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்திருந்து அதன் பின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.

இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: சீனா, பிரான்ஸ், ஜெர்மன், தென்கொரியா உள்பட 7 நாடுகளில் கொேரானா வைரஸ் தாக்கம் அதிகம் உள்ளது. இந்த நாடுகளிலிருந்து வருபவர்கள் உடல் நலக்குறைவுடன் இருந்தால் அவர்கள் இந்த மையத்தில் 14 நாட்கள் தங்க வைத்து, மருத்துவப் பணியாளர்களால் கண்காணிக்கப்படுவர். வைரஸ் தொற்று இருப்பதற்கான அறிகுறி இருந்தால் திருச்சி அரசு மருத்துவமனையில் உள்ள சிறப்பு வார்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர். கலெக்டர் ஆலோசனைப்படி தற்காலிக மருத்துவ கண்காணிப்பு மையத்தில் 75 படுக்கை வசதிகள் மற்றும் முதலுதவி சிகிச்சைக்கான உபகரணங்கள் அமைக்கப்படகிறது. ஓரிரு நாளில் இந்த காய்கறி வளாகத்தில் மருத்துவ கண்காணிப்பு மையம் செயல்படத் துவங்கும் என்றனர். இந்த வளாகத்தை கடந்த சில நாட்களுக்கு முன் கலெக்டர் சிவராசு மற்றும் சுகாதாரத்துறையினர் பார்வையிட்டனர்.

Related Stories: