கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஆனைமலை சுற்றுலா பகுதி மூடப்படுமா?'

பொள்ளாச்சி, மார்ச் 18: பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட  வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி உள்ளிட்ட வனச்சரகத்தில் உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு உள்ளூர் மட்டமின்றி வெளியூர்களில் இருந்தும் பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். கடந்தாண்டு தென்மேற்கு  பருவழை பெய்த போது, வனப்பகுதியில் உள்ள மரங்கள், செடிக்கொடிகள் செழிப்புடன் காணப்பட்டது. அதன்பின், இந்தாண்டு துவக்கத்தில் இருந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் வனத்தில் உள்ள மரக்கிளைகளில் இருந்து இலைகள் உதிர்ந்தது. வனத்தில் பசுமை குறைந்து பெரும்பாலான  இடங்களில் மரங்கள் காய்ந்தது. இருப்பினும், பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் வனத்திற்கு வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அவ்வப்போது அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் எதிரொலியால் கடந்த இரண்டு வாரமாக, டாப்சிலிப்புக்கு சுற்றுலா பணிகள் வருகை மிகவும் குறைந்தது. தினமும் 25க்கும் குறைவான சுற்றுலா பயணிகளே வந்து சென்றனர். அதுபோல், வால்பாறைக்கும் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது.

இருப்பினும், டாப்சிலிப் மற்றும் வால்பாறைகளுக்கு, வெளிமாநில மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்திருப்பதாக கூறப்படுகிறது. தற்போது, கொரோனா வைரஸ் பீதி உள்ள இந்த நேரத்தில், ஆனைமலை புலிகள் காப்பகத்திற்குட்பட்ட சுற்றுலா பகுதிகளுக்கு வெளியூர் சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கூடாது என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலை இருந்தாலும், கொரோனா வைரஸ் பீதி தொடர்ந்திருப்பதால், வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் மூலம் கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளதால், வன சுற்றுலா பகுதிகளுக்கு மட்டுமின்றி, வனத்தையொட்டிய விடுதிகளிலும் பயணிகளுக்கு அனுமதி மறுத்து தடைவிதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,`ஆனைமலை புலிகள் காப்பக வனப்பகுதி, கோடை காலங்களில் வெயிலின் தாக்கத்தை பொறுத்து மூடுவது வழக்கம். இந்தாண்டு கொரோனா வைரஸ் பீதியும் தொடர்ந்து ஏற்பட்டுள்ளதால், இன்னும் ஓரிரு நாட்களில் ஆனைமலை புலிகள் காப்பக சுற்றுலா பகுதியில் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டு, மூட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.

Related Stories: