தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பிடிஓ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம்

திருச்செங்கோடு, மார்ச் 18: மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேட்டூரில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரை காவிரி ஆறு, பொன்னியாறு, திருமணிமுத்தாறு வழியாக திருப்பி விடும் இணைப்புத் திட்டத்தை நிறைவேற்ற   வலியுறுத்தி கடந்த 60 ஆண்டு காலமாக விவசாயிகள் போராடி வருகின்றனர். ஆனால், எந்தவிதமான பயனும் இல்லை. இந்த திட்டத்தை நிறைவேற்ற நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே உத்தரவு பிறப்பிக்குமாறு வலியுறுத்தி மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் தமிழக விவசாயிகள் சங்கம்  சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு தமிழக விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் சுந்தரம் தலைமை  தாங்கினார். திரைப்பட நடிகரும், இயக்குனருமான  விஜய்கிருஷ்ணராஜ்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக மல்லசமுத்திரம் பஸ் நிலையத்தில்  இருந்து விவசாயிகள் பேரணியாக வந்து மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றிய   அலுவலகத்தை  அடைந்தனர். அங்கு  காவிரி பொன்னியாறு திருமணிமுத்தாறு இணைப்பு  திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த  ஆர்பாட்டத்தில் சங்கத்தின் கொள்கை பரப்பு செயலாளர் கிருஷ்ணமூர்த்தி  பாட்டுபாடி விவசாயிகளை ஊக்கப்படுத்தினார்.

இதுகுறித்து  நடிகர் விஜய்  கிருஷ்ணராஜ்  கூறியதாவது: நாமக்கல் மாவடடத்தில் திருமணிமுத்தாறு திட்டத்தை  நிறைவேற்றுபவர்களுக்கு நாங்களே வாக்கு சேகரிக்க உதவுவோம். இதனால், கூடுதலாக  25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வாக்குகள் கிடைக்கும். தற்போது, முதல்வராக உள்ள  எடப்பாடி பழனிசாமிக்கு அந்த வாய்ப்பு உள்ளது. அதனை அவர் பயன்படுத்திக் கொள்ள  வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள்  கலந்து கொண்டனர்.

Related Stories: