தமிழகத்திலேயே முதன்முறையாக குடிபோதையில் பைக் ஓட்டிய வாலிபர் கைது

செங்கல்பட்டு, மார்ச் 17: தமிழகத்தில் மது அருந்துவிட்டு வாகனம் ஓட்டினால், கைது செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று முன்தினம்   உத்தரவிட்டது. இதைதொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் போலீசார், வாகன ஓட்டிகளை தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், செங்கல்பட்டு பழைய பஸ் நிலையம் பகுதியில் செங்கல்பட்டு டவுன் எஸ்ஐ வாசு மற்றும்  போலீசார்  நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது,  அவ்வழியாக பைக்கில் அதிவேகமாக வந்த வாலிபரை மடக்கி போலீசார் விசாரித்தனர். ஆனால் அவர், சம்பந்தம் இல்லாமல் பேசினார்.

இதையடுத்து போலீசார் அவரை காவல்நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், அந்த வாலிபர் மது அருந்திவிட்டு போதையில் பைக்கை ஓட்டி வந்தது தெரிந்தது. மேலும் அவர், திருக்கழுக்குன்றம் அகத்திஸ்மங்களம்  மந்தைவெளி தெருவை சேர்ந்த  சுரேஷ் (37)  என தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில்  மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர்,    சுரேஷ் மீது குடிபோதையில், வாகனம் ஓட்டியதாக  வழக்குப்பதிவு செய்து, செங்கல்பட்டு முதலாவது குற்றவியல்  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, சுரேஷை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். அதன்படி, சுரேஷ் செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட, ஓரிரு நாட்களில் மது அருந்திவிட்டு பைக் ஓட்டிய வாலிபரை  செங்கல்பட்டு போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: