அம்பத்தூர் திருவேங்கடநகர் தெருவில் ஆறாக பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீரால் சுகாதார சீர்கேடு: அதிகாரிகள் அலட்சியம்

அம்பத்தூர்: அம்பத்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட  81வது வார்டில் திருவேங்கட நகர் உள்ளது. இதன் அருகிலேயே சோழம்பேடு சாலை, சி.டி.எச் சாலையும் அமைந்து உள்ளது. இதன் வழியாக ஏராளமான மக்கள் தினமும் சென்று வருகின்றனர். மேலும், திருவேங்கட நகர் பகுதியில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இச்சாலையில் உள்ள கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் ஆறாக ஓடுகிறது.  இதனால் சுகாதார கேடு ஏற்பட்டு குடியிருப்போர் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில், “அம்பத்தூர், திருவேங்கட நகர் பகுதியில் தனியார் பள்ளி, மருத்துவமனை, சிறுவர் பூங்கா, வணிக வளாகங்கள் மற்றும் குடியிருப்புகளும் அமைந்துள்ளன. இங்குள்ள பிரதான சாலை வழியாக தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் சென்று வருகின்றனர். இச்சாலையில் உள்ள கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகிறது. இந்த கழிவுநீர் தெருவில் பல நாட்களாக  ஆறாக ஓடி வருகிறது. இதனால் பாதசாரிகள் அறவே நடமாட முடியவில்லை.  

இதனால் அவர்களுக்கு தோல் நோய் ஏற்பட்டு பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், இரு சக்கர வாகன ஓட்டிகள் வேகமாக செல்லும் போது நடந்து செல்லும் பாதசாரிகள் மீது கழிவுநீர் தெளித்து அவர்களது உடைகள் வீணாகிறது. மேலும், இந்த வழியாக பள்ளி மாணவர்கள் சைக்கிளில் செல்லும்போது கழிவுநீர்பட்டு  சீருடைகளும் பாழாகிறது. மேலும், தெருவில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் இருந்து கொசுக்கள் உற்பத்தியாகி குடியிருப்புகள் படையெடுத்து வருகின்றன. இவைகள் கடித்து பல்வேறு வகையான மர்ம காய்ச்சல்கள் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கூறியுள்ளனர். இருந்த போதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கை எடுக்காமல் அலட்சியமாக உள்ளனர். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Related Stories: