சிவகாசியில் ரூ.170 செலுத்திய தொழிலாளிக்கு 5 ஆயிரம் ரூபாய் மின்கட்டணம் மின் இணைப்பை துண்டித்து அதிகாரிகள் அத்துமீறல்

சிவகாசி, மார்ச் 13: சிவகாசியில் ரூ.170 கட்டி வந்த கூலித்தொழிலாளி வீட்டின் மின்கட்டணம் திடீரென ரூ.5 ஆயிரம் அதிகரித்ததால் அதிர்ச்சியடைந்தார். மின் கட்டண குளறுபடியை சரிசெய்ய மனு கொடுத்த தொழிலாளியின் மின் இணைப்பை மின்வாரியத்தினர் துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி அம்மன் நகரை சேர்ந்தவர் முனியாண்டி(60). இவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. இவரது வீட்டில் பிரிட்ஜ், மின் மோட்டார், ஏசி போன்ற மின் சாதனங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. 4 எல்இடி விளக்குகள், மின் விசிறி மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளார்.வீட்டில் மேல்தளத்தில் வீடு எதுவும் இல்லை. இவர் கடந்த ஒரு வருடமாக இரண்டு மாதங்களுக்கு 200 யூனிட்டுக்குள் மட்டுமே மின்சாரத்தை பயன்படுத்தி வந்துள்ளார். இதற்காக மின் கட்டணமாக இரண்டு மாதத்திற்கு அதிக பட்சமாக ரூ.170 வரை மட்டுமே செலுத்தி வந்துள்ளார். கடந்த மாதம் 100 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரத்தை பயன்படுத்தியதால் பணம் எதுவும் செலுத்த வில்லை. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென வந்த மின்சார துறை ஆய்வாளர் ரூ,5 ஆயிரம் மின்கட்டன பாக்கி உள்ளது என கூறி உடனடியாக மின் கட்டணத்தை செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். கூலித்தொழிலாளியான தான், இது போன்ற அதிக மின்கட்டணம் இதுவரை செலுத்தியதில்லையென மின்துறை உயர் அதிகாரிகளிடம் முனியாண்டி முறையிட்டு மனு கொடுத்துள்ளார். இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக கூறிய அதிகாரிகள், நேற்று திடீரென மின் கட்டணத்தை செலுத்தாததால் இணைப்பை துண்டித்து சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த முனியாண்டி மின் கட்டணம் செலுத்த பணமின்றி பரிதவித்து வருகிறார்.

இதுகுறித்து முனியாண்டி கூறுகையில், எனது வீட்டில் ஆடம்பர மின்சாதன பொருட்கள் எதுவும் பயன்படுத்தவில்லை. எங்கள் குடும்பம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறது. பல ஆண்டுகளாக இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை ரூ.170 க்கு மேல் மின் கட்டணம் செலுத்தியதே இல்லை. கடந்த மாதம் குறைவான அளவு மின்சாரம் பயன்படுத்தியுள்ளதால் மின்கட்டணம் செலுத்த தேவையில்லை என கணக்கீட்டாளர் சொல்லி விட்டு சென்றார். ஆனால் மின்சார ஆய்வாளர் ரூ.5 ஆயிரம் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லையென்றால் மின் இணைப்பை துண்டித்து விடுவோம் என கூறியதால் உயர் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தேன். தவறுதலாக கணக்கெடுக்கப்பட்டுள்ளது என்றும், மின் கட்டணத்தை குறைத்து விடுகிறோம் என்றனர். ஆனால், நேற்று மின்வாரிய அதிகாரிகள் பணத்தை உடனயடியாக செலுத்த கூறி மின்இணைப்பை துண்டித்து சென்று விட்டனர். கூலி வேலை செய்யும் என்னால் திடீரென 5 ஆயிரம் செலுத்த முடியாததால் மின்சாரமின்றி அவதிப்படுகிறேன் என்றார். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் ெபரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: