கதவணையில் பராமரிப்பு பணிகள் மீன்களை இரையாக்க காத்திருக்கும் பறவைகள்

பள்ளிபாளையம், மார்ச் 13:காவிரி ஆற்றின் கதவணையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் ஆயிரக்கான நீர் பறவைகள் மீன்களுக்காக காத்து கிடக்கின்றன. மேட்டூர் அணை மூடப்பட்டுள்ளதால், காவிரி ஆறு வறண்டு கற்பாறைகளாக காட்சியளிக்கிறது. மேட்டூரிலிருந்து சோழசிராமணி வரை உள்ள கதவணைகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு, பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. கதவணை கதவுகளில் சிக்கி கிடக்கும் மரங்கள், கட்டைகள், முட்கள் போன்றவை அகற்றப்பட்டு கதவுகளின் உறுதித்தன்மை குறித்து பொறியாளர்கள் சோதித்து வருகின்றனர். இந்நிலையில், கதவணை பகுதியில் நீர் தேக்காமல் வெளியேற்றப்பட்டுள்ளது.

இதனால் அணையின் பெரும்பகுதி நீரின்றி வறண்டு கிடக்கிறது. நீரில் இருந்த மீன்கள் வெளியேறிவிட்டதால் போதிய உணவு கிடைக்காமல் ஆயிரக்கணக்கான நீர்பறவைகள், ஆற்றில் குட்டையாக தேங்கி கிடக்கும் நீரைச் சுற்றி இரைக்காக காத்துக்கிடக்கின்றன. நீரில் மீன்களின் எண்ணிக்கை குறைந்து போனதால் மீனவர்களும் பரிசல்களை கரையோரம் வைத்துள்ளனர். அதே போல், மீன்கள் கிடைக்காமல் நீர்பறவைகள் கூட்டம் கூட்டமாக வானத்தில் வட்டமடித்து கரையோர விவசாய கிணறுகளுக்கு செல்கிறது.

Related Stories: