ஆத்தூரில் போலீஸ் என கூறி மூதாட்டியிடம் நூதன முறையில் 10 பவுன் செயின் பறிப்பு

ஆத்தூர், மார்ச் 12: ஆத்தூரில் வீட்டின் முன்பு நின்றிருந்த மூதாட்டியிடம், போலீஸ் எனக்கூறி நூதன முறையில் 10 பவுன் செயினை பறித்து சென்ற பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர். சேலம்  மாவட்டம், ஆத்தூர் காந்தி நகரில் வசிப்பவர் வசந்தா(50). இவர் நேற்று காலை 9  மணியளவில், தனது வீட்டிற்கு வெளியில் நின்றுகொண்டு இருந்தார். அப்போது  பைக்கில் ஹெல்மெட் அணிந்து வந்த 2 பேர், வசந்தாவிடம் தாங்கள் போலீஸ்  எனவும், அப்பகுதியில் தனியாக நடந்தும் செல்லும் பெண்கள் மற்றும் வீட்டின்  வெளியில் நிற்கும் பெண்களிடம் செயின் பறிப்பு நடப்பதை கண்காணிக்க வந்ததாகவும் கூறியுள்ளனர். மேலும்,  வசந்தா அணிந்திருந்த செயினை கழட்டி பத்திரமாக பையில்  வைத்துக்கொள்ளும்படி தெரிவித்தனர். இதை நம்பிய வசந்தா, தன்னுடைய கழுத்தில்  அணிந்திருந்த 10 பவுன் செயினை கழற்றி, பையில் வைத்துள்ளார்.

அப்போது பையை  வாங்கி சோதனையிட்ட வாலிபர்கள், அதில் இருந்த தங்க செயினை  எடுத்துக்கொண்டனர். பின்னர் பையை வசந்தாவிடம் கொடுத்து விட்டு, அங்கிருந்து சென்றுவிட்டனர். அவர்கள் சென்றதும் பையை  பார்த்த வசந்தா, அதில் செயின் இல்லாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் கூச்சலிட்டார். அதை கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டனர். இதுகுறித்து தகவலறிந்து  சம்பவ இடத்துக்கு வந்த ஆத்தூர் போலீசார், வசந்தாவிடம் விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார்  அப்பகுதியில் வீடுகளில் பொருத்தியுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை  பெற்று விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: