காட்டுமன்னார்கோவில் ஊராட்சியில் அடிப்படை வசதி இல்லாத அரசு தொழில்நுட்ப பயிற்சி நிலையம்

காட்டுமன்னார்கோவில், மார்ச் 11: காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் அடிப்படை வசதியில்லாத அரசு தொழில்நுட்ப பயிற்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இதனால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

காட்டுமன்னார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள அரசு மண்டபத்தில் வாடகையில் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இயங்கி வந்தது. இது கடந்த 2014 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதில் தற்போது 30 மாணவிகள் உட்பட 175 மாணவர்கள் படித்து வருகின்றனர். ஆனால் இந்த கட்டிடத்தில் மாணவர்களுக்கு தகுந்த வகுப்பறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டிடத்தை கட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்து வந்தனர்.இதனையடுத்து அரசு நிதியில் ரூ6.75 கோடி செலவில் முஷ்ணம் வட்டம் தேத்தாம்பட்டு கிராமத்தில் அரசு தொழில்நுட்ப நிலைய கட்டிடம் கட்டப்பட்டு, கடந்த வாரம் வகுப்புகள் துவங்கியது.

ஆனால் காட்டுமன்னார்கோவில் மற்றும் குமராட்சி ஒன்றியங்களில் இருக்கும் கிராமங்களை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் அங்கு சென்றுவர மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். காட்டுமன்னார்கோவிலில் இருந்து சுமார் 50 நிமிடம் பேருந்தில் செல்லும் தொலைவில் இது அமையப்பட்டுள்ளதால் காலை 8.30 மணிக்கு துவங்கும் வகுப்புக்கு மாணவர்கள் காலை 7.15 மணிக்கு காட்டுமன்னார்கோவிலில் இருந்து புறப்படும் பேருந்தில் செல்லவேண்டும். இதனால் சரியான நேரத்தில் செல்ல முடியாத நிலை உள்ளது. குறிப்பாக கிராம பகுதியில் இருந்து செல்லும் மாணவர்கள் மதிய உணவு கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர். இதேபோல மாலை நேரத்திலும் குறித்த நேரத்தில் பேருந்து இல்லாத காரணத்தால் வீட்டிற்கு செல்ல இரவு 8 மணிக்குமேல் ஆகிறது.

இதன் காரணமாக தொழிற்பயிற்சி மாணவர்கள் 20க்கும் மேற்பட்டோர் நேற்று காட்டுமன்னார்கோவில் தாலுகா அலுவலகத்திற்கு வந்து வட்டாட்சியர் தமிழ்ச்செல்வனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.இதுகுறித்து மாணவர்களிடம் கேட்டபோது; அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் சுமார் 150க்கும் மேற்பட்டோர் காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்தவர்கள்தான். ஆனால் முஷ்ணம் பகுதியில் இருந்து 25 மாணவர்கள் மட்டுமே இங்கு படிக்கின்றனர். சில மாணவர்களுக்காக அதிக எண்ணிக்கையுள்ள மாணவர்களாகிய எங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தும் தொழிற்நுட்ப பயிற்சி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சட்டமன்ற உறுப்பினரிடம் மனுவாக அளிக்க சென்றால் எங்களின் ஆசிரியர்கள் எங்களை மிரட்டுகின்றனர். இதனால் வேறு வழியின்றி காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியரிடம் பேருந்து, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டி கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

 அடிப்படை வசதிகளை செய்துகொடுக்கவில்லை எனில் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறைக்கு எதிராக வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தை மேற்கொள்வோம் என தெரிவித்தனர். பயிற்சி வகுப்புகளுக்கான உபகரணங்கள் உள்ளிட்டவைகள் பழைய கட்டிடத்தில் இருந்து மாற்றப்படவில்லை. மாறாக மாணவர்கள், ஆசிரியர்கள் மட்டுமே புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: