பெருமாள் கோயிலில் நகை திருட்டு

திருக்கோவிலூர், ஜூன் 7: பெருமாள் கோயிலில் நகை திருடிய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த மணலூர்பேட்டையில் பிரத்யோக வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயில் மிகவும் பழமையான கோயில் என்பதால் தமிழ்நாடு இந்து சமய அறநிலைய துறை சார்பில் கடந்த மூன்று மாதத்திற்கு முன் சுமார் ரூ.1.25 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கோயில் அர்ச்சகராக ஜெகதீஷ் என்பவர் கடந்த 10 வருடமாக பணியாற்றி வருகிறார். கடந்த 4ம் தேதி வழக்கம் போல் கோயிலை பூட்டிவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, தேவி பூதேவி கழுத்தில் இருந்த தாலியில் தங்கத்திலான பொட்டு காணாமல் போய் இருப்பது தெரிய வந்தது.

இது குறித்து கோயில் செயல் அலுவலர் வேல்விழி, மணலூர்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் கோயில் வளாகத்தில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது சிசிடிவி கேமிரா ஆய்வு செய்தபோது அதிகாலை அர்ச்சகர் ஜெகதீஷ் நெய் வைத்திய பூஜை செய்துவிட்டு கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கிக் கொண்டிருக்கும்போது திடீரென ஒரு பெண் உள்ளே நுழைந்து தாயார் கழுத்தில் இருந்த நகையை எடுத்துச் செல்வது பதிவாகி இருந்தது. இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிந்து பக்தர் போல் நடித்து தாயார் கழுத்தில் இருந்த நகையை அபேஸ் செய்த பெண்ணை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post பெருமாள் கோயிலில் நகை திருட்டு appeared first on Dinakaran.

Related Stories: