திருச்செந்தூர் மாசித்திருவிழா 12ம் நாளில் மலர் கேடய சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா

திருச்செந்தூர்,  மார்ச் 11:  திருச்செந்தூர் மாசித்திருவிழாவில் 12ம் நாளையொட்டி மலர்கேடய சப்பரத்தில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. இதை பெண்கள் உள்ளிட்ட திரளானோர் தரிசித்தனர். திருச்செந்தூர்  சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா கடந்த பிப். 28ம் தேதி  கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை, மாலை சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடந்தது. விழாவின் சிகரமான தேரோட்ட வைபவத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். 11ம் திருவிழாவான நேற்று முன்தினம் மாலை சிவன்  கோயிலில் இருந்து புறப்பட்ட சுவாமி, அம்பாள் சன்னதி தெரு யாதவர்  மண்டகப்படியை சென்றடைந்ததும் சிறப்பு  அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது.

தொடர்ந்து இரவு சுவாமி, அம்மன் புஷ்பச்சப்பரங்களில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வெளிவீதியுலாவாக நெல்லை நகரத்தார் தெப்பக்குளம் மண்டகப்படியை வந்தடைந்தனர். இதையடுத்து சுவாமி தெப்பத்தில் 11 முறை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 12ம் திருநாளையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு மஞ்சள்  நீராட்டு திருக்கோலத்தில் எட்டு வீதிகளிலும் வலம் வந்த சுவாமி, அம்பாள் வடக்கு ரதவீதி திருவிழா மண்டபத்தை சேர்ந்தனர். இதையடுத்து சிறப்பு அலங்கார அபிஷேக தீபாராதனையை தொடர்ந்து இரவு 9 மணிக்கு சுவாமி, அம்பாள்  மலர் கேடயச்சப்பரத்தில் வீதியுலாவாக திருக்கோயிலை வந்தடைந்தனர்.

Related Stories: