அஞ்சல் துறை காப்பீடு திட்டத்தில் விபத்தில் இறந்தவரின் வாரிசுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு தொகை

தூத்துக்குடி, ஜன. 3: குலசேகரன்பட்டினம் பகுதியை சேர்ந்த சரவணன், கடலில் சிப்பி அள்ளும் வேலை செய்து வந்துள்ளார். இவர் அஞ்சல் துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ரூ.320 செலுத்தி விபத்து காப்பீடு செய்திருந்தார். இந்நிலையில், அவர் கடலில் சிப்பி அள்ளும் வேலையில் ஈடுபட்டிருந்த போது கடலில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து, அவரது மனைவி விமலாவிற்கு தூத்துக்குடி அஞ்சல் கோட்ட முதுநிலை கண்காணிப்பாளர் செந்தில்குமார், விபத்து காப்பீட்டுத் தொகையான ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது அவர் கூறுகையில், இந்திய அஞ்சல்துறையின் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் ஆண்டிற்கு ரூ.549 மற்றும் ரூ.799 செலுத்தி அஞ்சல் துறை மூலம் எளிய மக்கள் பயன் பெறும் வகையில் ரூ.10 மற்றும் 15 லட்சத்திற்கான விபத்துக் காப்பீடு நடைமுறைபடுத்தப்பட்டு உள்ளது, என்றார். நிகழ்ச்சியில், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி மற்றும் அஞ்சல் துறையை சேர்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: