சிறப்பு மருத்துவ குழு நியமனம் புதுவை விமான நிலையத்தில் இன்று முதல் தீவிர பரிசோதனை

புதுச்சேரி, மார்ச் 11:  சீனாவில் கடந்த டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருவது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் மட்டும் கொரோனாவால் இதுவரை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகம் முழுவதும் பலி பண்ணிக்கை 4 ஆயிரத்ததை தாண்டி விட்டது. 1.28 லட்சம் பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கும் கொரோனா பரவி விட்டது. பிரான்ஸ் நாட்டில் கொரோனாவுக்கு இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். பிரான்ஸ் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக புதுச்சேரி இருந்ததால் இங்கு அதிகம்பேர் பிரான்சில் இருந்து சுற்றுலா வந்து செல்கின்றனர். மேலும், பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். எனவே, கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளான பிரான்ஸ் நாட்டினர் மற்றும் பிரெஞ்ச் குடியுரிமை பெற்றவர்கள் யாரேனும் புதுச்சேரி வந்தால் பரவ வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த மாநில சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. புதுச்சேரி விமான நிலையத்தில் இருந்து தினமும் ஐதராபாத், பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே, புதுவை விமான நிலையத்தில் பயணிகளை இன்று முதல் தீவிர பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக விமான நிலையத்திற்கென சிறப்பு மருத்துவக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே, வெளிநாட்டில் இருந்து ஐதராபாத் வழியாக புதுவை விமான நிலையத்துக்கு வந்த பயணி ஒருவர், புதுச்சேரி மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு திடீரென இறந்ததாக தகவல் பரவி வருகிறது. ஆனால் இந்த தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.

Related Stories: