திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா

களக்காடு, மார்ச் 11:   திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோயிலில் பங்குனி பிரம்மோற்சவ விழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. பங்குனி தேரோட்டம் 19ம் தேதி நடக்கிறது. களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் திருக்கோயில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகும். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட சிறப்பு பெற்ற இக்கோயிலில் நம்பி சுவாமிகள் நின்ற நம்பி, அமர்ந்த நம்பி, பள்ளிகொண்ட நம்பி, திருமலை நம்பி, திருப்பாற்கடல் நம்பி என்று 5 கோலங்களில் வீற்றிருப்பது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு ஆண்டு தோறும் பங்குனி மாதம் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா கோலாகலமாக நடப்பது வழக்கம். இந்தாண்டு திருவிழா நேற்று (10ம் தேதி) தொடங்கியது. இதையொட்டி நம்பி சுவாமிகளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. அதனைதொடர்ந்து ராமானுஜ ஜீயர் முன்னிலையில் திருக்கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. முன்னதாக கொடிப்பட்டம் பல்லக்கில் வைக்கப்பட்டு ரதவீதிகளில் மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.  

விழா நாட்களில் தினமும் நம்பி சுவாமிக்கு திருமஞ்சனமும், இரவில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருதலும் நடக்கிறது. நம்பி சுவாமிகள் சித்தர்களுக்கு காட்சி கொடுக்கும் வைபவம் திருவிழாவின் 5ம் நாளான வருகிற 14ம் தேதி (சனி) நடக்கிறது. அன்று இரவில் 5 நம்பி சுவாமிகளும் தனித்தனி கருட வாகனங்களில் எழுந்தருளுகின்றனர். அதனை தொடர்ந்து அதிகாலையில் மேலரதவீதியில் 5 நம்பி சுவாமிகளும் மகேந்திரகிரி மலையை நோக்கி தேவமகரிஷிகளுக்கு திருக்காட்சி அளிக்கின்றனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்ட விழா 10ம் நாளான வருகிற 19ம் தேதி (வியாழன்) நடக்கிறது. அன்று காலை 7.30 மணியில் இருந்து 8.30 மணிக்குள் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. 11வது திருநாளான வரும் 20ம் தேதி மாலை 5 மணிக்கு நம்பியாற்றில் தீர்த்தவாரி நடைபெறுகிறது.

Related Stories: