கோடை சீசனுக்காக 1.5 லட்சம் மலர் நாற்றுகள் காட்டேரி பூங்காவில் நடவு

குன்னூர், மார்ச்10: இயற்கை சூழலில் அமைந்துள்ள  குன்னூர் காட்டேரி பூங்காவில்  முதல் சீசனுக்காக ஒன்றரை லட்சம்  மலர் நாற்றுகள் நடவு செய்யும்  பணி நேற்று துவங்கியது. குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் குன்னூரிலிருந்து சுமார்  6 கி.மீ தொலைவில் தோட்டக்கலைத் துறை நிர்வாகத்தின் கீழ் காட்டேரி பூங்கா உள்ளது. இயற்கைசூழலில் அமைந்துள்ள இந்த பூங்காவில் முதல் மற்றும் இரண்டாம் சீசனுக்கு புதிய மலர் நாற்றுகள் நடவு செய்வது வழக்கமாக இருந்து வருகிறது. வரும் ஏப்ரல், மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் முதல் சீசன் தொடங்க உள்ளது. இந்த ஆண்டின் முதல் சீசனுக்காக ஒன்றரை லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யும் பணி  நேற்று  துவங்கியது. இந்த மலர்களில்  ஆன்ட்ரினம்,  பெடுனியா, பால்சம் , பெகோனியா,  பேன்சி, சால்வியா,  ஆஸ்டர், போன்ற  முப்பது வகையான மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட உள்ளன. இந்த மலர் விதைகள் ஜெர்மனி, பிரான்ஸ் நெதர்லாந்து, பஞ்சாப், கொல்கத்தா,  காஷ்மீர்  போன்ற பகுதிகளிலிருந்து  விதைகள் பெறப்பட்டு நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. நடவு பணியை நேற்று குன்னூர் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் பெபிதா தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் தோட்டக்கலை அலுவர்கள் பண்ணை இயற்கை விவசாயிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: