கொடைக்கானல் மலைப்பூண்டு விலை கிடுகிடு விவசாயிகள் மகிழ்ச்சி

கொடைக்கானல், மார்ச் 6: கொடைக்கானலில் வரத்து குறைவால் மலைப்பூண்டு விலை கிலோ ரூ.100 வரை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, கூக்கால், மன்னவனூர், பூண்டி, போளூர், கிளாவரை, பழம்புத்தூர் மற்றும் சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட ஊர்களில் மருத்துவ குணம் கொண்ட மலைப்பூண்டு என அழைக்கப்படும் வெள்ளைப்பூண்டு பயிரிடப்படுகிறது. 100 ஆண்டுகளுக்கு மேலாக கொடைக்கானல் மலைப்பகுதியின் முக்கிய விவசாயமாகவும், விலை பொருளாகவும் இந்த மலைப்பூண்டு இருந்து வருகிறது. மேலும் தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் அதிக கிராக்கி இருப்பதுடன், மருத்துவ குணங்களும் அதிகமிருப்பதால் கொடைக்கானல் மலைப்பூண்டு கடந்த பல மாதங்களுக்கு புவிசார் குறியீடு பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆண்டுதோறும் சுமார் 3000 ஏக்கர் அளவிற்கு இம்மலைப்பூண்டு பயிரிடப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த சீசனில் மழை குறைவாக இருந்த காரணத்தினால் விவசாயிகள், சுமார் 500 ஏக்கர் அளவிற்கே மலைப்பூண்டுவை பயிரிட்டனர். தற்போது அறுவடை துவங்கிய நிலையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மலைப்பூண்டு வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் அதன் விலை கிலோ ரூ.50 முதல் ரூ.100 அதிகரித்து விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதுகுறித்து மலைப்பூண்டு விவசாயிகள் கூறியதாவது, ‘3000 ஏக்கரில் இருந்த மலைப்பூண்டு சாகுபடி இந்த ஆண்டு போதிய மழையில்லாததால் 500 ஏக்கர் அளவிற்கே பயிரிட்டோம். இதனால் வரத்து குறைந்து ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.450 வரை விலை போகிறது. கடந்த ஆண்டு இதே மலைப்பூண்டு ரூ.300 முதல் ரூ.350 வரை மட்டுமே விற்பனையானது. தற்போது மேட்டுப்பாளையம் ரக மலைப்பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு வெளிமாநிலங்களுக்கு விதை பூண்டாக விற்கப்பட்டு

வருகிறது. இதன் காரணமாகவும் மலைப்பூண்டு அதிக விலைக்கு போகிறது. தற்போது மலைப்பூண்டு அதிகளவில் பயிரிடப்பட்டு உள்ளது. இதை அறுவடை செய்யும் போது குறைந்த விலையில் கிடைக்க வாய்ப்புள்ளது. புவிசார் குறியீடு பெற்ற கொடைக்கானல் மலைப்பூண்டுவிற்கு இங்கேயே சந்தை அமைத்து தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்மூலம் விவசாயிகள் வாழ்வாதாரம் உயரும்.’ என்றார்.

Related Stories: