திருப்புவனம், சிவகங்கை ஊராட்சி தேர்தல் இழுத்தடிப்பு விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை திமுக மாவட்ட செயலாளர் அறிவிப்பு

சிவகங்கை, மார்ச் 5: சிவகங்கை மாவட்ட ஊராட்சி தேர்தல், திருப்புவனம் ஒன்றியக்குழு தேர்தல் நடத்தாமல் இழுத்தடிப்பது குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தி விரைவில் அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பெரியகருப்பன் எம்எல்ஏ தெரிவித்தார். சிவகங்கையில் திமுக மாவட்ட செயலாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ கூறியதாவது: மாவட்ட ஊராட்சி தலைவர் தேர்தலில் ஜனநாயக முறைப்படி தேர்தலை சந்தித்து வெற்றி பெற வேண்டும். தோல்வி பயத்தால் அதிமுகவினர் வராமல் உள்ளனர். ஆளும் கட்சியும், மாவட்ட நிர்வாகமும் இணைந்து தேர்தலை நடத்தாமல் ஜனநாயக படுகொலை செய்கின்றனர்.

திருப்புவனத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்பட வெவ்வேறு காரணங்களை கூறி ஒவ்வொரு முறையும் தேர்தலை நள்ளிரவில் தள்ளி வைக்கின்றனர். அமைதியாக உள்ள திருப்புவனத்தில் தொடர்ந்து தேர்தலை தள்ளி வைத்து இவர்களே சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துகின்றனர். சட்டம் ஒழுங்கில் சிறப்பான மாநிலம் என மத்திய அரசிடம் தமிழக முதல்வர் விருது பெற்றார். அப்படி எனில் அந்த விருது போலி விருதா என்பதை தெரிவிக்க வேண்டும். மக்களால் தேர்தலின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரத்தை வழங்காமல் இருப்பது மோசடியாகும். இது கண்டிக்கத்தக்கது.

நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் திருப்புவனம் தேர்தலை நடத்தாமல் நிறுத்தி வைக்கின்றனர். சர்வாதிகாரத்துடன் நீண்ட நாள் நடக்க முடியாது. எல்லாம் விரைவில் முடிவுக்கு வரும். சிவகங்கை மாவட்ட ஊராட்சி தேர்தல், திருப்புவனம் ஒன்றியக்குழு தேர்தல் நடத்தாமல் இழுத்தடிப்பது குறித்து அனைத்துக்கட்சி தலைவர்களிடம் ஆலோசனை நடத்தியும், தலைமையின் வழிகாட்டுதல் படியும் விரைவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவித்தார். உடன் திமுக கூட்டணி மாவட்ட கவுன்சிலர்கள், முன்னாள் அமைச்சர் தென்னவன், காங்கிரஸ் முன்னாள் மாவட்டத்தலைவர் ராஜரெத்தினம் மற்றும் திமுக ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி நிர்வாகிகள் இருந்தனர்.

Related Stories: