பெரும்பாறை மலைப்பகுதியில் காபி கொட்டை விலை கிடுகிடு 3 ஆண்டுக்கு பின் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சி

பட்டிவீரன்பட்டி, மார்ச் 4: பெரும்பாறை மலைப்பகுதியில் காபி கொட்டை விலை 3 ஆண்டுகளுக்கு பின் உயர்வால்விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கீழ் பழநி மலையான பெரும்பாறை, தாண்டிக்குடி, மஞ்சள்பரப்பு, கொங்கபட்டி, பூலத்தூர், கும்பரையூர், மங்களம்கொம்பு, கும்பம்மாள்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காபி, மிளகு, மலைவாழை விவசாயம் அதிகளவில் நடக்கிறது.

இப்பகுதிகளில் காபி பழ சீசன் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு துவங்கியது. இந்த ஆண்டு பருவம் தவறிய மழை மற்றும் மாறிவரும் பருவநிலை போன்ற காரணங்களினால் காபி விளைச்சல் சுமார் 60 சதவீதம் குறைந்து விட்டது.

தாண்டிக்குடி மலைப்பகுதியில் அரபிக்கா, ரப்போஸ்டா என 2 வகையாக காபி செடிகள் பயிரிடப்பட்டுள்ளன. அரபிகா காபி செடி வகையை சேர்ந்தாகும். ரப்போஸ்டா காபி மர வகையை சேர்ந்ததாகும். இந்த காபி செடிகள் நடப்பட்ட காலத்திலிருந்து 4 ஆண்டுகளில் பலன் தர தொடங்கும். நவம்பர், டிசம்பர், ஜனவரி காபி சீசனாகும். இந்த சீசன் மார்ச் வரை நீடிக்கும். கடந்த 4 மாதமாக நீடித்த காபி சீசன் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. காபி செடிகளில் சிவப்பு மற்றும் பச்சை நிறத்தில் பறிக்க தகுந்த திரட்சியாக உள்ள காபி பழங்களை கூலித்தொழிலாளிகள் மூலம் செடியிலிருந்து பறிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. செடியிலிருந்து பறித்த பின் காபி பழங்களை வெயிலில் உலர வைக்கின்றனர். அதன்பின்பு காபி பழங்களில் உள்ள வெளித்தோல் நீக்கப்படுகின்றது. இதனை காபி தளர் என்று அழைக்கின்றனர். இந்த காபி தளரை, காபி கொட்டையாக மாற்றுவதற்காக விவசாயிகளிடமிருந்து மொத்த வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர்.

கடந்த ஆண்டை பொறுத்தவரை காபி விளைச்சல் எதிர்பார்த்த அளவும் இல்லை. போதிய விலையும் கிடைக்கவில்லை. ஆனால் காபி விளைச்சல் குறைந்த போதும் 3 ஆண்டுகளுக்கு பின்பு இந்த ஆண்டு காபி தளர் விலை கிலோவிற்கு ரூ. 190 வரை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரூ.125 வரை விற்ற காபி தளர் விலை தற்போது ரூ. 190 வரை உயர்ந்துள்ளது. தொடர்ந்து விலை ஏறுமுகத்தில் உள்ளதால் காபி விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் பெரும்பாறை கீழ் பழநி மலைப்பகுதியில் விளையும் காபிகள் அதிகளவில் ரசாயனம் இன்றி இயற்கையான தட்பவெப்ப நிலையில் விளைவிக்கப்படுவதால் உள்ளூர் மக்களாலும் விரும்பி வாங்கப்படுகின்றது.

இதுகுறித்து காபி விவசாயி மகேஷ் கூறுகையில், ‘தற்போது காபி செடிகளில் பறிக்கும் பணிகள் முடியும் தருவாயில் உள்ளது. காபி பழங்களிலிருந்து எடுக்கப்பட்ட காபி தளர் கொட்டை கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.125 ரூபாய் இருந்த நிலையில் தற்போது ரூ.190 வரை உயர்ந்துள்ளது. பொதுவாக இந்த விலை நிர்ணயம் காபி ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களால் தான் செய்யப்படுகின்றது. மேலும் சர்வதேச சந்தையிலும் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகின்றது. சர்வதேச அளவில் காபியின் பயன்பாடு அதிகரித்து வருவதே இந்த விலை உயர்வுக்கு காரணம். வேலை ஆட்களில் கூலி உயர்வுக்கு ஏற்ப காபி தளரின் விலை ரூ.250 வரை உயர்ந்தால் விவசாயம் மேம்படும். மேலும் இந்த காபி விவசாயத்தை முன்னோக்கி எடுத்து செல்வதற்கு போதிய உத்வேகம் ஏற்படுவதுடன், காப்பி விவசாயத்தை அதிகரிக்க வேண்டும் என்ற ஆர்வமும் இப்பகுதி விவசாயிகளிடம் ஏற்படும்’ என்றார்.

Related Stories: