கணியம்பாடி மோத்தக்கல் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் 1,494 பயனாளிகளுக்கு ₹1.10 கோடியில் நலத்திட்ட உதவிகள் டிஆர்ஓ, எம்எல்ஏ வழங்கினர்

வேலூர், பிப்.28:வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த மோத்தக்கல் கிராமத்தில் நடந்த சிறப்பு மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் ₹1 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.வேலூர் தாலுகா கணியம்பாடி அடுத்த மோத்தக்கல் கிராமத்தில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன் தலைமை தாங்கினார். தாசில்தார் சரவணமுத்து வரவேற்றார். எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன் முன்னிலை வகித்து பேசினார்.தொடர்ந்து, மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சாரதா ருக்மணி, வேளாண் உதவி இயக்குனர் கலையரசி, வேளாண் அலுவலர் சவுபாக்கியலட்சுமி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் அரசு திட்டம் குறித்து பேசினர்.

இம்முகாமில் மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், எம்எல்ஏ ஜே.எல்.ஈஸ்வரப்பன் ஆகியோர், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, முதிர்கன்னி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ்கள் உட்பட மொத்தம் ஆயிரத்து 494 பயனாளிகளுக்கு ₹10 கோடியே 10 லட்சத்து 45 ஆயிரத்து 265 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.இதில் மண்டல துணை தாசில்தார் விநாயகமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் சிவசங்கரன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: