கும்பகோணத்தில் கேட்பாரற்று திறந்தே கிடக்கும் தபால் பெட்டி

கும்பகோணம், பிப். 27: கும்பகோணம் உப்புக்கார தெருவில் தபால் பெட்டி சேதமடைந்து கேட்பாராற்று திறந்து கிடக்கிறது. எனவே புதிய பெட்டி வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கும்பகோணம் நகராட்சிக்கு உட்பட்ட உப்புக்கார தெரு இலுப்பையடி விநாயகர் கோயில் எதிரில் பல ஆண்டுகளாக தபால் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வணிக நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில் போதுமான பராமரிப்பின்றி தபால் பெட்டியை துருபிடித்து அரித்து போனது.மேலும் பெட்டியில் மழைநீர் பட்டு பட்டு மேலும் துருபிடித்து தபால் கிடக்கும் பகுதியில் உள்ள பூட்டுகள் உடைந்ததால் கதவுகள் திறந்து கிடக்கிறது. இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள், தபால்துறை அதிகாரியிடம் பலமுறை தெரிவித்தும் கண்டுகொள்ளவில்லை. தற்போது தபால் பெட்டி கேட்பாரற்று திறந்து கிடக்கிறது. எனவே தபால் பெட்டியை புதிதாக வைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த குணசேகரன் கூறுகையில், உப்புக்கார தெருவில் உள்ள பொதுமக்கள் தபால் பெட்டியை பயன்படுத்தி வந்தனர். தற்போது போதிய பராமரிப்பின்றி தபால் பெட்டியின் பூட்டு உடைந்து திறந்து கிடக்கிறது. மேலும் தபால் ஊழியர்கள் இங்குள்ள பெட்டியில் உள்ள தபால்களை எடுப்பதற்கு பெரும்பாலான நாட்களில் வராததால் அங்குள்ள வணிகர்கள், அரசு அலுவலகத்தில் உள்ளவர்கள் தலைமை தபால் நிலையத்துக்கு சென்று தபால்களை போட்டு வருகின்றனர். கடந்த சில மாதங்களாக தபால் பெட்டி கேட்பாரற்று திறந்து கிடப்பதால் பொதுமக்கள் தபால் போடுவதையே நிறுத்தி விட்டனர். எனவே உடைந்த பெட்டியை அகற்றி விட்டு புதிய தபால் பெட்டியை வைக்க வேண்டும் என்றார்.

இதுகுறித்து தபால் துறை அதிகாரி கூறுகையில், தபால் பெட்டியில் தபால்களை எடுக்க செல்லும் அலுவலர்கள் எங்களிடம் கூற வேண்டும். உப்புகார தெருவில் உள்ள தபால் பெட்டி மிகவும் மோசமான நிலையில் இருப்பது குறித்து அலுவலர்கள் தகவல் தெரிவிக்கவில்லை.அப்பகுதிக்கு என்றுள்ள தபால் எடுப்பவர்கள் அங்கு கடந்த சில நாட்களாக போகவில்லை என்று தெரிகிறது. இதுகுறித்து விசாரித்து புதிய தபால் பெட்டி வைப்பதுடன் அங்கு தபால் எடுக்கும் அலுவலரிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Related Stories: