அரியவகை ஆமை முட்டைகளை வனத்துறையினர் சேகரிப்பு

பாகூர், பிப். 27:  பாகூர் அடுத்த நல்லவாடு கடற்கரை பகுதியில் சுமார் 9100 ஆலிவ் ரிட்லி ஆமைகளின் முட்டைகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அவற்றை வனத்துறை ஊழியர்கள் குஞ்சு பொரிப்பிற்காக பாதுகாப்பாக மணலில் புதைத்தனர். மாறி வரும் தட்பவெப்ப சூழலால் உலகில் உள்ள பல உயிரினங்கள் அழிவின் விளிம்பிற்கு தள்ளப்பட்டுள்ளன. அந்த வகையில் கடல் வாழ் உயிரினங்களில் ஒன்றான ஆலிவ் ரிட்லி வகை ஆமையும் ஒன்று. அரிய வகை ஆமையான இந்த ஆலிவ் ரிட்லி ஒரு சிறப்பு இயல்பை பெற்றிருக்கிறது. உலகம் முழுக்க விரவியிருக்க கடலில், ஆலிவ் ரிட்லி ஆமைகள் எந்த பகுதியில் வசித்தாலும், அவை முட்டையிடும் நேரத்தில் தான் பிறந்த இடத்திற்கே வந்து முட்டையிட்டு செல்லும். அதன்படி புதுச்சேரியில் மணல்பரப்பு மிகுந்த பனித்திட்டு, மூர்த்திக்குப்பம், நரம்பை, சின்ன வீராம்பட்டினம், புதுக்குப்பம், காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடற்கரையில் அவை அதிகளவில் வந்து முட்டையிட்டு செல்கின்றன. நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை அவை இவ்வாறு முட்டையிட்டு செல்கின்றன.

அவ்வாறு இடப்படும் முட்டைகள் பொரிந்து குஞ்சுகள் கடலுக்கு சென்றுவிடுகின்றன. கடற்கரையில் இடப்படும் முட்டைகள் மனிதர்களாலும், பிற விலங்குகளாலும் சேதமடையாமல் இருக்க புதுச்சேரி வனத்துறை அந்த முட்டைகளை சேகரித்து பாதுகாப்பாக வைத்து குஞ்சு ெபாரிக்க உரிய ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஆலிவ் ரிட்லி ஆமைகள் இட்ட சுமார் 9100 முட்டைகளை வனத்துறையினர் சேகரித்துள்ளனர். இவற்றை நல்லவாடு புதுக்குப்பம் மற்றும் மூர்த்திக்குப்பம் புதுக்குப்பம் கடற்கரையில் மணலில் புதைத்து வைத்துள்ளனர். இவ்வாறு புதைத்து வைக்கப்படும் முட்டைகள் 45-50 நாட்களில் பொரிந்து குஞ்சுகள் வெளியே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: