பிளஸ்2 அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடித்தால் அறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட்

நாமக்கல், பிப்.26: பிளஸ்2 அரசு பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பதை பறக்கும்படை உறுப்பினர்கள் கண்டுபிடித்தால், அறை கண்காணிப்பாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்டுவார்கள் என  இணை இயக்குனர் எச்சரித்துள்ளார். நாமக்கல் அரசு ஆண்கள் தெற்கு மேல்நிலைப்பள்ளி கலையரங்கில் நேற்று, பிளஸ் 2 அரசுபொதுத்தேர்வு பணியில் ஈடுபடும் முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வழித்தட அலுவலர்கள், கட்டு காப்பாளர்கள் மற்றும் பறக்கும்படை உறுப்பினர்களுக்கான ஆலோசனைகூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளிகல்வித்துறை இணை இயக்குனர் பொன்.குமார் தலைமை வகித்துபேசியதாவது: பிளஸ்1, பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு பணியில் ஈடுபடும்  தலைமைஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் அனைவரும் தங்களது  பொறுப்புகளைஉணர்ந்து பணியாற்றவேண்டும். தேர்வினை நேர்மையாக நடத்தவேண்டும். தேர்வில் பிட் வைத்து எழுதும் மாணவர்களை பறக்கும்படையினர் வந்துபிடித்தால், அந்த அறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள். பிற்பகல் 12 மணி வரை ஒரு மாணவர் ஒரு மதிப்பெண் கேள்விக்கு விடை எழுதவில்லை என்றால் எதோ மையத்தில் நடக்கபோகிறது என அர்த்தம். இதை அறை கண்காணிப்பாளர்கள் உணர்ந்து கொள்ளவேண்டும். தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களையும் கண்காணிக்கவேண்டும்.

வினாத்தாள் கொடுத்த உடன் மாணவர்களின் செய்கைகளை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். கேள்வித்தாளை செல்போனில் போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் அனுப்பியது கடந்த காலங்களில் நடந்துள்ளது. அது போன்ற தவறுகள் எந்த மையத்திலும் நடக்க கூடாது. பறக்கும் படைக்கு சேலம் மாவட்டத்தில் இருந்தும் ஆசிரியர்கள் நாமக்கல் மாவட்டத்துக்கு வர இருக்கிறார்கள். எனவே அறை கண்காணிப்பாளர்களுக்குரிய அறிவுரைகளை முதன்மை கண்காணிப்பாளர்கள் கூறவேண்டும். முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள் பணிபுரியும் தேர்வுமையத்தில் அவர்களின் வாரிசுகள், உறவினர்கள் மகன், மகள் யாராவது தேர்வு எழுதினால் அவர்கள் முன்கூட்டியே முதன்மைக் கல்வி அலுவலரிடம் தெரிவித்து வேறு மையங்களுக்கு சென்றுவிட வேண்டும். தேர்வின் போது இதுதெரியவந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல், தனியார் பள்ளிகளில் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் தொடர்பில் இருப்பவர்களும் முன்கூட்டியே தெரிவித்து தேர்வு பணியில் இருந்து விலகிக் கொள்ளவேண்டும். வினாத்தாளை, வழித்தட அலுவலர்கள்  குறித்த நேரத்தில் அனைத்து மையங்களுக்கும் கொண்டு செல்லவேண்டும். இவ்வாறு இணை இயக்குனர் பொன்.குமார் தெரிவித்தார். கூட்டத்தில் முதன்மைகட கல்வி அலுவலர் அய்யணன், மாவட்ட கல்வி அலுவலர்கள் உதயக்குமார், ரவி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: