திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழா கொடியேற்றம் ஏராளமானோர் பங்கேற்பு

திண்டுக்கல், பிப். 26: திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பெருந்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு மாசி பெருந்திருவிழா கடந்த பிப்.20ம் தேதி பூ அலங்கார மண்டகப்படியுடன் துவங்கியது. தொடர்ந்து பிப்.21ம் தேதி பூத்தமலர் பூ அலங்கார தேர்பவனி நடைபெற்றது. நேற்று கோயில் மைய மண்டபத்தில் அமைந்துள்ள கொடிமரத்தில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. முன்னதாக சாம்பன்குல மக்கள் பாலக்கோம்பை எடுத்து வந்து நகர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடத்தப்பட்டு பாலக்கோம்பை கோயிலில் ஊன்றப்பட்டது. தொடர்ந்து விஸ்வகர்மா மகா சபையினரால் கொண்டு வரப்பட்ட பட்டுப்புடவை அம்மனுக்கு சாத்தப்பட்டு, பொட்டு கட்டும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோயில் கருவறையில் இருந்து மஞ்சள் துணியில் அம்மன் உருவம் பொறித்த கொடி கொண்டு வந்தனர். தொடர்ந்து அம்மன் கண் திறக்கப்பட்டதும், கோயில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் பால்குடம், முளைப்பாரி மண்டகப்படி, பூக்குழி இறங்குதல், தேர்பவனி, மஞ்சள் நீராட்டு விழா போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளது.

Related Stories: