மன்னார்குடி, பிப். 20: தேசிய அறிவியல் தினத்தையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் வடகோவனூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் துளிர் அறிவியல் விழா நடை பெற்றது. இதில் திரளான மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், தமிழ்நாடு பொது நூலகத்துறை இணைந்து தேசிய அறிவியல் தினத்தை யொட்டி வடகோவனூர் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப்பள்ளியில் துளிர் அறிவியல் விழா நடைபெற்றது. விழாவிற்கு மன்னார்குடி வட்டாரக் கல்வி அலுவலர் முனைவர் ராமசாமி தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் அறிவழகன், பாலசுப்பிரமணியன் அறிவியல் இயக்க மாவட்ட தலைவர் புகழேந்தி, மாவட்டச் செயலாளர் பொன்முடி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலச் செயலாளர் ஸ்டீபன் நாதன் அறிவியலில் புதுமை பேசுவோம் என்ற தலைப்பிலும், சூழலியல் செயற்பாட்டாளர் மணிமாறன் அறிவியல் பேசுவோம் என்ற தலைப்பிலும், வாசிப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆசைத்தம்பி வாசிப்பை நேசிப்போம் என்ற தலைப்பிலும் பேசினர்.
அரிச்சந்திரபுரம் அறிவியல் ஆசிரியர் முரளி சார்லஸ் டார்வினின் வாழ்க்கை வரலாற்றினையும் அவர் கூறிய கருத்துக்கள் உலகளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதை மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார். நிகழ்ச்சியில் டார்வினின் முகமூடி அணிந்து மாணவர்கள் டார்வினின் வாழ்க்கையினை நடித்துக் காட்டினர். நிகழ்ச்சியில் கோட்டூர் அறிவியல் இயக்க செயலாளர் கண்ணன், பொருளாளர் வினோத் ஆசிரியர்கள் கலைச் செல்வம், துரை பாண்டியன், விஜய், ராணி உள்ளிட்ட பொதுமக்களும், மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண் டனர். முன்னதாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அமோகன் வரவேற்றார். முடிவில் அறிவியல் ஆசிரியர் அசோகன் நன்றி கூறினார்.