மாணவர்களுக்கான நடனம், பாட்டு, ஓவிய போட்டிகள்

திருவாரூர், நவ. 5: திருவாரூர் மாவட்டத்தில் 5 முதல் 16 வயதிற்குட்பட்டவர்களுக்கு நடனம், பாட்டு மற்றும் ஓவியப்போட்டிகள் வரும் 10ந் தேதி நடைபெற உள்ளது என கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கி வரும் மாவட்ட சவகர் சிறுவர் மன்றங்களில் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே, சிலம்பாட்டம் போன்ற கலைப் பயிற்சி வகுப்புகள் திருவாரூர் மாவட்ட அரசு இசைப்பள்ளியில் நடத்தப்பட்டு வருகின்றன.

பரிசு மற்றும் சான்று: மாவட்ட அளவில் 5 முதல் 8 வயது வரையிலும், 9 முதல் 12 வயது வரையிலும் மற்றும் 13 முதல் 16 வயதிற்குட்பட்ட மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வுவை ஏற்படுத்திடவும், பரதநாட்டியம், கிராமிய நடனம் (நாட்டுப்புறக் கலை) குரலிசை, ஓவியம் ஆகிய கலைகளில் கலைப் போட்டிகள் நடத்திடவும், இக்கலைப் போட்டிகளில் முதலிடம், 2ம் இடம், 3ம் இடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

திரைப்பட பாடல்கள் அனு
மதியில்லை: நடன போட்டிகளில் பரதநாட்டியம், குச்சிப்புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப்படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசை பாடல்களுக்கான திரைப்பட நடனங்கள் நீங்கலாக) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதியில்லை. பக்கவாத்தியங்களையோ, ஒலி நாடாக்களையோ பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றை போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்துக் கொள்ளவேண்டும். அதிகபட்சம் 5 நிமிடங்கள் வரை நடனமாட அனுமதிக்கப்படும். மேலும், தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் ஆடலாம். மேலும், பாட்டு போட்டியில் கர்நாடக இசை, தேசியப் பாடல்கள், சமூக விழிப்புணர்ச்சிப் பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றில் தமிழ்ப் பாடல்கள் மட்டுமே பாடவேண்டும். பக்கவாத்தியக் கருவிகளை, பாடுபவர்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மேற்கத்திய இசை கூடாது: மேற்கத்திய இசை, திரையிசைப் பாடல்கள், குழுப்பாடல்கள் அனுமதியில்லை. அதிகப்பட்சம் 5 நிமிடங்கள் பாடலாம். ஓலி பெருக்கியைப் பயன்படுத்தக் கூடாது. மேலும், ஓவியப் போட்டிக்கு 40க்கு 30 செ.மீ. அளவுள்ள ஓவியத்தாள்களையே பயன்படுத்தவேண்டும். பென்சீல், கிரையான், வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், பெயிண்டிங் என எவ்வகையிலும் ஓவியங்கள் அமையலாம். ஓவியத்தாள் வண்ணங்கள் தூரிகைகள் உள்பட தங்களுக்குத் தேவையானவற்றைப் போட்டியாளர்களே கொண்டுவருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதியில்லை. ஒவ்வொரு வயது வகைக்கும் தனித்தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும்போது அறிவிக்கப்படும். வயது, பள்ளிபடிப்பு சான்று அவசியம்: போட்டிகளில், வெற்றி பெரும் மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். இப்போட்டியில், கலந்து கொள்வோர் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5 முதல் 16 வயதிற்குட்பட்டவர்கள் தங்களது வயதுச் சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்புச் சான்றிதழ்களுடன் திருவாரூர் வ.சோ. ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் வரும் 10ந் தேதி காலை 9 மணிக்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு, கலெக்டர் சாரு தெரிவித்துள்ளார்.

The post மாணவர்களுக்கான நடனம், பாட்டு, ஓவிய போட்டிகள் appeared first on Dinakaran.

Related Stories: