இளைஞர் எழுச்சி நாளாக ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாட முடிவு

ஊட்டி, பிப். 20: நீலகிரி மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் கண்ணன் தலைமையில் மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில நேற்று நடைபெற்றது. மாவட்ட செயலாளர் முபாரக் வரவேற்றார். மாவட்ட துணைச் செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், மாநில சிறுபான்மை பிரிவு துணை செயலாளர் அன்வர்கான் பொதுக்குழு உறுப்பினர்கள் கருப்பையா, சதக்கத்துல்லா, வெங்கடேஷ், ஷீலாகேத்ரின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளை இந்த ஆண்டும் நீலகிரி மாவட்டத்தில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இளைஞர் எழுச்சிநாளையொட்டி வரும் மார்ச் 1ம் தேதி முதல் தி.மு.க. அமைப்புகள் சார்பில் கொடியேற்றி, இனிப்பு வழங்கும் நிகழ்ச்சிகள், ஆதரவற்றோர் இல்லங்களில் அறுச்சுவை உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள், ரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சிகள், மரக்கன்று நடுவிழா நிகழ்ச்சிகள், மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு ஊட்டச்சத்து மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. மேலும், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள், தெருமுனை பிரசார நிகழ்ச்சிகள், மாணவ, மாணவிகளுக்கு உதவிகள் வழங்குவது, விளையாட்டு போட்டிகள் போன்ற நிகழ்ச்சிகளை சிறப்பாக நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு யானைகள் முகாமில், பழங்குடியின சிறுவனை தனது காலணியை கழற்ற சொன்னதற்கு தி.மு.க. சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.  பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் நோக்கில் செயல்பட்டு, தமிழகத்திற்கு தலைகுனிவை ஏற்படுத்திய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை தமிழக ஆளுநர் உடனே அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். மத்திய பா.ஜ. அரசு நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடு ஆகிய கொடுஞ்சட்டங்களை நிறைவேற்றியது. மக்களவையில் பா.ஜ. அரசுக்கு உள்ள பெரும்பான்மையை வைத்து அவையில் இச்சட்டங்கள் நிறைவேறின. ஆனால் மாநிலங்களவையில் அ.தி.மு.க. எம்.பி.க்கள் வாக்களித்ததாலேயே இந்த சட்டங்கள் மூன்றும் நிறைவேறி குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டங்களை அமல்படுத்துவதின் மூலம் இந்திய குடிமக்களுக்கு பெரும் பாதிப்பு உள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர், மாவட்டத்திலுள்ள 4 ஊராட்சி ஒன்றியங்களில் 3 ஊராட்சி பெருந்தலைவர்கள் மற்றும் பல ஊராட்சி மன்ற தலைவர்கள் வெற்றிப்பெற வியூகம் அமைத்த மாவட்ட செயலாளர் மற்றும் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தலைமை கழகத்தின் அறிவுரைப்படி நீலகிரி மாவட்டத்திலும் வரும் 21ம் தேதி முதல் தொடர்ந்து  மாவட்டத்திலுள்ள ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிளை கழகங்களுக்கு மட்டும் தலைமை கழகத்தின் ஊர்கிளை உட்கிளை பட்டியல்படி உட்கட்சி தேர்தல் நடைப்பெற உள்ளது. இதில் போட்டியிட விரும்பும் தோழாகளுக்கான வேட்பு மனு படிவங்கள் 21ம் தேதி காலை முதல் மாவட்ட அலுவலத்திலும், ஒன்றிய செயலாளர்களிடத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.நீலகிரி மாவட்ட தி.மு.க. உட்கட்சி தேர்தல் பொறுப்பாளர்களாக தலைமைக் கழக நிர்வாகி டாக்டர் மஸ்தான், மாவட்ட செயலாளர் முபாரக், மாவட்ட துணைச் செயலாளர் ரவிக்குமார், கூடலூர் எம்.எல்.ஏ. திராவிட மணி, தேர்தல் பணிக்குழு செயலாளர் ராமச்சந்திரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் இமயம் சசிகுமார் ஆகியோரை நியமித்ததற்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

நீலகிரி மாவட்டத்தில் உட்கட்சி தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள பிரதிநிதி டாக்டர் மஸ்தானிடம் ஆலோசனை பெற்று, நீலகிரி மாவட்டத்திற்காக தலைமை கழகத்தால் நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் மேற்பார்வை குழுவினர் கூடி முடிவு செய்து தேர்தல் நடைபெறும் கிளைகளின் விவரம், தேதி ஆகியவை சம்பந்தப்பட்ட ஒன்றிய கழக செயலாளர்கள், நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து அறிவிப்பது என தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் லியாகத் அலி, தொரை, பரமசிவன், ராஜேந்திரன், உதயதேவன், நகர செயலாளர்கள் ராமசாமி, காசிலிங்கம், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் இமயம் சசிகுமார், ஆனந்தன், ஜெயகுமாரி, கர்ணன், எல்கில்ரவி, காந்தல் ரவி, ரெணால்டு வின்சென்ட், தேவராஜ், ஆலன், யோகேஸ்வரன், செல்வராஜ், பேரூர் கழக செயலளார்கள் பிரகாஷ்குமார், தேவஹரிதாஸ், சுந்தர்ராஜ், முத்து, ரமேஷ்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் நௌபுல், சேகரன், பாபு, நாகராஜ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் ஜெகநாத் ராவ், ஜெய்விக்னேஷ், சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்துகொண்டனர். முடிவில் பொதுக்குழு உறுப்பினர் கருப்பையா நன்றி கூறினார்.

Related Stories: