சிங்கம்புணரி மல்லாக்கோட்டையில் பொதுமக்கள் பங்களிப்பில் புதுப்பொலிவு பெற்ற அரசு பள்ளி

சிங்கம்புணரி, பிப். 19: சிங்கம்புணரி அருகே மல்லாக்கோட்டை அரசு பள்ளியில் பொதுமக்கள் பங்களிப்போடு ஸ்மார்ட் கிளாஸ், குடிநீர் இயந்திரம், நடைபாதை, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டு புதுப்பொலிவு அடைந்துள்ளது. சிங்கம்புணரி அருகே மல்லாகோட்டை அரசு தொடக்கப்பள்ளியில் பொதுமக்களின் பங்களிப்போடு மெய்யுணர் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) தொடக்க விழா, இலக்கிய மன்ற தொடக்க விழா, புரவலர்களுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் சாந்தி தலைமை வகித்தார். கூடுதல் வட்டார கல்வி அலுவலர் ஜேம்ஸ், குறுவள மைய தலைமையாசிரியர் சந்திவீரன், தொழிலதிபர் மேகவர்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தலைமையாசிரியர் பொன் பால்துரை வரவேற்றார்.  வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூபதி வெள்ளைச்சாமி, ஆசிரியர் பயிற்றுனர்கள் சேவுகமூர்த்தி, வான்மதி, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன், வட்டார செயலாளர் சுரேஷ், வட்டார தலைவர் பாலகிருஷ்ணன், பொருளாளர் ஞானவிநாயகன், மூத்த ஆசிரியர் ஆரோக்கிய செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞான அற்புதராஜ், உதவி ஆசிரியர் அமலா மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பலர்  கலந்து கொண்டனர். பொதுமக்கள் சார்பில் மெய்யுணர் வகுப்பறை, நடைபாதை, சுற்றுச்சுவர், குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், சீருடை என ரூ.10 லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்களை பள்ளிக்கு நன்கொடை வழங்கினர். கடந்தாண்டு 8 மாணவர்களுடன் இயங்கிய இப்பள்ளி பொதுமக்கள் ஒத்துழைப்போடு 64 மாணவர்கள் பயிலும் பள்ளியாக மாற்றிய ஆசிரியர்களுக்கும், நன்கொடை வழங்கிய புரவலர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Related Stories: