‘எங்கள் அண்ணனை எதிர்த்து வாழ முடியுமா’ என கூறி வாலிபர் மீது நாட்டு வெடிகுண்டுகள் வீச்சு

சென்னை, பிப். 19: சென்னை வேளச்சேரி பெரும்பாக்கம், பாரதியார் தெருவைச் சேர்ந்தவர் முத்துசெல்வம் (35). இவருக்கும், அந்த பகுதியைச் சேர்ந்த அம்மா பேரவை துணை செயலாளராக உள்ள அதிமுக பிரமுகர் ஒருவருக்கு இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே முத்துசெல்வத்தின் தந்தைக்கு சொந்தமான பல கோடி மதிப்புள்ள இடத்தை அதிமுக பிரமுகர் போலி ஆவணம் தயாரித்து அபகரித்துவிட்டனர். இதனால் முத்துசெல்வத்திற்கும், அதிமுக பிரமுகருக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு முத்துச்செல்வம், மாம்பாக்கம் மெயின் சாலை நேரு நகர் சந்திப்பில் பைக்கில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 3 பேர் திடீரென முத்துசெல்வத்தின் பைக் மீது மோதினர்.  இதில் நிலைத்தடுமாறி முத்துசெல்வம் கீழே விழுந்தார். உடனே பைக்கில் வந்த 3 நபர்களும் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்து செல்வத்திடம், ‘எங்கள் அண்ணனை எதிர்த்து நீ ஊரில் வாழ முடியுமா?’ என்று கூறியபடி சரமாரியாக வெட்டினர். இதை சற்றும் எதிர்பார்க்காத முத்துசெல்வம் வெட்டு காயங்களுடன் தப்பி ஓடினார். ஆனாலும் கும்பல் விடாமல் பின் தொடர்ந்து சென்று நாட்டு வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.

திடீரென வெடி சத்தம் கேட்டதும், அருகில் இருந்த பொதுமக்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த 3 மர்ம நபர்களும் பைக்கை விட்டுவிட்டு உயிர் பிழைத்தால் போதும் என்று தப்பி ஓடிவிட்டனர். நாட்டு வெடிகுண்டு வீச்சில் முத்து செல்வத்திற்கு இடதுபக்க காது, கழுத்து, கை, கைவிரல்கள் மற்றும் இரண்டு கால்களும் சிதைந்து, ரத்த வெள்ளத்தில் துடித்தார். உடனே பொதுமக்கள் முத்துசெல்வத்தை மீட்டு பள்ளிக்கரணை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். நாட்டு வெடிகுண்டு வீச்சு சம்பவம் குறித்து தகவலறிந்த பள்ளிக்கரணை போலீசார் வந்து கொலையாளிகள் விட்டு சென்ற பைக்கை பறிமுதல் செய்து பதிவு எண்களை வைத்து விசாரணை நடத்தினர். அப்போது, அதே பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகரின் ஆதரவாளரான ராஜேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்து முத்துசெல்வத்தை கொலை செய்ய வந்தது தெரியவந்தது. குற்றவாளிகளின் அடையாளங்கள் தெரிந்தும், கொலை முயற்சி பின்னணியில் அதிமுக பிரமுகர் ஈடுபட்டுள்ளதால், வழக்கை போலீசார் சரிவர விசாரிக்காமல் காலம் கடத்தி வருவதாக கூறப்படுகிறது. முத்துசெல்வம் மீது நாட்டு வெடிகுண்டு வீசி அரிவாளால் வெட்டிய நபர்கள் யார்? என்று அடையாளம் தெரிந்தும் போலீசார் கைது செய்யாமல் காலம் கடத்தி வருவதாக முத்துசெல்வம் தரப்பில் குற்றம்சாட்டியுள்ளனர்.

சமீபகாலமாக பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்கு உட்பட பகுதியில் சட்டம் ஒழுங்கு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மாக் பாரில் மது அருந்தி கொண்டிருந்த 2 வாலிபர்களை ஆட்டோவில் வந்த நபர்கள் சரமாரியாக வெட்டி கொன்றனர். அதேபோல், அதிமுக பிரமுகரின் இல்லத்திருமண விழா பேனர் விழுந்து மென் பொறியாளர் சுப தண்ணீர் லாரியில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்துக்கு காரணமான அதிமுக பிரமுகரை கைது செய்யாமல் அவருக்கு ஆதரவாக செயல்பட்டதாக பள்ளிக்கரணை போலீசார் மீது அப்பகுதி மக்கள் கடும் அதிர்ப்தியில் இருந்தனர். அதை உறுதி செய்யும் வகையில் நாட்டு வெடிகுண்டு வீச்சு வழக்கில் மீண்டும் அதிமுக பிரமுகருக்கு ஆதரவாக போலீசார் ஈடுபட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Related Stories: