வனப்பகுதியில் இறந்த குட்டி யானையை நெருங்க விடாமல் தாய் யானை காவல்

கூடலூர், பிப். 19:கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பள்ளிப்படி பகுதியை அடுத்துள்ள கொச்சு குன்னு தனியார் எஸ்டேட்  பகுதியையொட்டி வனப்பகுதியில் குட்டி யானை ஒன்று கடந்த இரு தினங்களுக்கு முன் இறந்துள்ளது. யானைக் கூட்டம் அப்பகுதியிலேயே நிற்பது குறித்து தோட்ட நிர்வாகம் சார்பில் வனத்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து நேற்று முன்தினம் மாலை அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் குட்டி யானை ஒன்று இறந்து கிடப்பதையும் அருகில் மூன்று யானைகள் நிற்பதையும் பார்த்துள்ளனர். அருகில் நெருங்க முயன்றபோது அங்கிருந்த தாய் யானை உள்ளிட்ட மூன்று யானைகள் விரட்டியதாலும்  இருட்ட துவங்கியதாலும் பின் வாங்கிய வனத்துறையினர் நேற்று  காலை முதல் மீண்டும் யானைகளை கண்காணித்து இறந்த குட்டியை பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டனர். ஆனால் நேற்றும் தாய் யானை குட்டியின் அருகிலேயே நிற்பதால் குட்டியை நெருங்க முடியாமல் வனத்துறையினர் தூரத்தில் நின்று கண்காணித்து வருகின்றனர்.

 பட்டாசு வெடித்து யானையை விரட்ட முயன்றால் அது வனத்துறையினரை துரத்த கூடும் என்பதாலும், யானை இறந்து கிடக்கும் பகுதியில் குடியிருப்பு பகுதிகள் இல்லாததாலும் யானை தானாகவே அங்கிருந்து செல்லும்வரை  குட்டியின் அருகில் செல்லும் நடவடிக்கை வனத்துறையினர் கைவிட்டு உள்ளனர். அத்துடன் அப்பகுதியில் தொழிலாளர்களை வேலைக்கு அனுப்ப கூடாது என்றும் பொதுமக்களை யானை நிற்கும் பகுதிக்கு செல்ல அனுமதிக்கக் கூடாது என்றும் வனத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். தாய் யானை தானாக அங்கிருந்து செல்லும்வரை பிரேத பரிசோதனை நடவடிக்கைகளை ஒத்திவைத்து உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தாய் யானை குட்டியை பிரிந்து செல்ல மனம் இன்றி அதன் அருகிலேயே நிற்பதும் சிறிது நேரம் படுப்பதுமாக அந்த இடத்தை விட்டு அகலாமல் உள்ளது. சம்பவ இடத்தில், உதவி வன பாதுகாவலர் விஜயன், வனச்சரகர் ராமகிருஷ்ணன், வனக்காலர்கள் பிரதீப் குமார், பிரகாஷ் மற்றும் வனத்துறையினர் யானையின் நடவடிக்கையை கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: