முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் துவக்கம்

ஈரோடு, பிப்.19: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஈரோடு மாவட்ட விளையாட்டு பிரிவு சார்பில் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி ஈரோடு வ.உ.சி.பூங்கா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் தலைமை தாங்கினார். விடுதி மேலாளர் சாந்தி முன்னிலை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா கலந்து கொண்டு போட்டிகளை துவக்கி வைத்தார். நேற்று தடகளம், நீச்சல், ஜூடோ, குத்துச்சண்டை ஆகிய போட்டிகள் ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்திலும், பெண்களுக்கான வளைகோல் பந்து போட்டி புஞ்சை புளியம்பட்டி கேஓஎம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெற்றது.

இதில் தடகளத்தில் 266 பேரும், நீச்சல் போட்டியில் 70 பேரும், ஜூடோ போட்டியில் 30 பேரும், குத்துச்சண்டை போட்டியில் 49 பேரும், வளைகோல் பந்து போட்டியில் 6 அணிகளும் கலந்து கொண்டன. இதைத்தொடர்ந்து, இறகுபந்து , கூடைப்பந்து, கபடி, டென்னீஸ், கையுந்து பந்து ஆகிய போட்டிகளும் நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு முதலிடம் பெறும் வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். மாநில அளவிலான போட்டிகள் சென்னையிலும், மாநில அளவிலான கபடி போட்டி மதுரையிலும் நடைபெற உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: