சின்னமனூர் பகுதியில் அதிகரிக்கும் தெருநாய் தொல்லை ரேபிஸ் அச்சத்தில் பொதுமக்கள்

சின்னமனூர், பிப். 18: சின்னமனூர் பகுதியில் கூட்டம், கூட்டமாக சுற்றும் தெருநாய்களால், பொதுமக்கள் ரேபிஸ் அச்சத்தில் உள்ளனர். சமீபமாக 19 பேர் தெருநாய் கடித்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சின்னமனூர் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள 14 கிராம ஊராட்சிகள், 4 பேரூராட்சிகளில் மொத்தம் 3 லட்சம் பொதுமக்கள் உள்ளனர். இப்பகுதியில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தெருக்களில் செல்லும் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளை துரத்தி அச்சுறுத்தி வருகிறது. இவைகளை கட்டுப்படுத்த நகராட்சி, ஊராட்சி, பேருராட்சி நிர்வாகங்கள் பிடித்து தெருநாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவர். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக நாய்களுக்கு கருத்தடை ஊசி போடுவது நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், சின்னமனூர் நகரம், ஒன்றிய கிராமங்களில் தெருநாய்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவைகள் கழிவுநீர் வாறுகால்களில் புரண்டும், கோழிக்கழிவுகளை தின்று சுற்றுகின்றனர். சாலை மற்றும் தெருக்களில் சுற்றுவோரை துரத்தி, துரத்தி அச்சுறுத்துகின்றன.

சமீபகாலத்தில், சின்னமனூர் தேவர் நகரைச் சேர்ந்த நாகராஜ் மகன் செல்வராஜ் (13), சுந்தர் மகன் சந்தோஷ் (13), வினோத் (23), சுண்ணாம்பு கார தெரு பிச்சைகனி மகன் முகமது இலியா (5), செல்வம் மகன் பேரன்பன், செல்வராஜ் மகன் சந்தோஷ்குமார் (10), அசோகன் மகன் கிஷோத்தரன், முருகன் மகள் கீர்த்தனா (10), சோனைமுத்து (60) மற்றும் குச்சனூர், வேப்பம்பட்டி, துரைச்சாமிபுரம் ஆகிய ஊர்களைச் சேர்ந்த மொத்தம் 19 பேர் தெருநாய் கடிக்கு சின்னமனூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே, சின்னமனூர் நகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் தெருநாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: