குமாரபாளையத்தில் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு பொதுமக்கள் சாலை மறியல்

பள்ளிப்பாளையம், பிப்.18: குமாரபாளையத்தில் குடிநீர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதை கண்டித்து, பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. குமாரபாளையம் நகராட்சி 1வது வார்டு காவேரிநகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்டோர், முறையாக குடிநீர் வரி  செலுத்தவில்லை.  இதையடுத்து, நேற்று காலை சம்பந்தப்பட்ட குடிநீர் இணைப்புகளை துண்டிக்க நகராட்சி ஊழியர்கள் சென்றனர். அவர்களிடம், கால அவகாசம் கொடுக்கும்படியும், அதற்குள் வரியை செலுத்தி விடுவதாகவும் அப்பகுதி மக்கள் முறையிட்டனர். ஆனால், வரி செலுத்தாத 50 வீடுகளின் குடிநீர் இணைப்புகளை, நகராட்சி ஊழியர்கள் துண்டித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடைப்பாடி சாலையில் திரண்ட பொதுமக்கள், திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த குமாரபாளையம் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.  மேலும், நகராட்சி கமிஷனர் ஸ்டான்லி பாபு மற்றும் அதிகாரிகள் சென்று சமரசம் செய்தனர். அப்போது, கூடுதல் அவகாசம் அளிப்பதாக உறுதி அளித்தனர். இதனால், சமாதானம்  அடைந்த பொதுமக்கள், அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து, துண்டிக்கப்பட்ட குடிநீர் குழாய்களுக்கு மீண்டும் இணைப்பு கொடுக்கப்பட்டது.

Related Stories: