பைக் மீது லோடு வேன் மோதி நர்ஸ் பலி

வில்லியனூர், பிப். 18: வில்லியனூர் அருகே நேற்று காலை நடந்த சாலை விபத்தில் கணவன் கண்ணெதிரே நர்ஸ் பரிதாபமாக உயிரிழந்தார்.வில்லியனூர் அடுத்த விநாயகம்பட்டு பகுதியை சேர்ந்தவர் அன்பழகன். தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி விஜயகலா (38). ஜிப்மர் மருத்துவமனையில் நர்சாக பணியாற்றி வந்தார். இவர்களுக்கு 5 மற்றும் 3 வயதில் இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் இருவரும் புதுச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.

வார விடுமுறையான சனி, ஞாயிறுக்கிழமைகளில் அன்பழகன் திருபுவனை பகுதியில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று தங்குவது வழக்கம். அதன்படி இந்த வாரம் தனது மாமியார் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேற்று காலை மனைவியை மருத்துவமனையில் விடுவதற்கும், மகன்களை பள்ளியில் விடுவதற்கும் மொபட்டில் அழைத்துக் கொண்டு வில்லியனூர் நோக்கி வந்துள்ளார்.
Advertising
Advertising

அரியூர் பெட்ரோல் பங்க் அருகே வந்தபோது, விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பேருந்து, முன்னால் சென்ற லோடு வேனை முந்த முயன்றது. அப்போது எதிரே ஒரு கார் வந்ததால் பஸ் டிரைவர் திடீரென பஸ்சை இடதுபுறமாக திருப்பினார். அப்போது லோடு வேன் மீது பஸ் மோதியது. பஸ் மோதிய வேகத்தில் லோடு வேன் முன்னால் சென்ற அன்பழகனின் பைக் மீது மோதியது.இதில் பைக்கில் சென்ற விஜயகலா தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது லோடுவேன் ஏறியதால் உடல் நசுங்கி படுகாயம் அடைந்தார். மேலும் அந்த வேன் அரியூரை சேர்ந்த ஜாபர் என்பவர் ஓட்டி வந்த பைக் மீதும் மோதியது. இதில் அவரும் படுகாயம் அடைந்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக அன்பழகனும், அவரது குழந்தைகளும் காயமின்றி தப்பினர்.

படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய விஜயகலாவையும், ஜாபரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் விஜயகலா செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். ஜாபர் ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து வில்லியனூர் போக்குவரத்து போலீஸ் ஏட்டு சந்திரகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். கணவன் மற்றும் பிள்ளைகள் கண் எதிரே ஜிப்மர் நர்ஸ் விபத்தில் இறந்தது வில்லியனூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: