நிதிச்சூழலை பொறுத்து அனுமதி

புதுச்சேரி, பிப். 18: நிதிச்சூழலை பொறுத்து வாரியங்களில் சேர்மன் நியமனத்துக்கு அனுமதி வழங்குவது குறித்து முடிவெடுக்க வேண்டும் என தலைமை செயலருக்கு கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர் இது தொடர்பான விரிவான அறிக்கையை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும், கட்சிக்காக உழைத்தவர்களுக்கு வாரிய தலைவர் பதவி வழங்கப்படும் என கட்சி தலைமை வாக்குறுதியளித்திருந்தது. அதன்படி காங்கிரஸ் ஆட்சி பொறுப்பேற்றதும் 7 எம்எல்ஏக்களுக்கு வாரிய சேர்மன் பதவி வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து காங்கிரஸ் நிர்வாகிகள் தங்களுக்கு சேர்மன் பதவி கிடைக்கும் என காத்திருந்தனர். அதே நேரத்தில் ஆளும் நாராயாணசாமி தலைமையிலான அரசுக்கும், கவர்னர் கிரண்பேடிக்கு மோதல் நிலவி வந்தது. இத்தகைய சூழலில் கவர்னரின் அனுமதி கிடைக்குமா என்ற சந்தேகத்தில், சேர்மன் பதவியை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில் நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு தன்னிச்சையாக நியமித்தது. மேலும் மத்திய அரசின் வாரியங்களுக்கு சேர்மன், உறுப்பினர் பதவிளையும் நிரப்பியது.

Advertising
Advertising

இது காங்கிரசாரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. கட்சி தலைமைக்கு புகார் கடிதமும் அனுப்பினர். மேலிடப்பொறுப்பாளர் முகுல்வாஸ்னிக்கை நேரில் சந்தித்து வலியுறுத்தினர். இதையடுத்து கட்சி தலைவர் சோனியாகாந்தி வாரிய தலைவர் நியமனத்துக்கான பட்டியலை அனுப்பி வைக்குமாறு கூறினார். இதனை பரிசீலனை செய்து, அனுமதி வழங்கினார். தொடர்ந்து பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு,  இறுதியாக கவர்னர் கிரண்பேடியின் ஒப்புதலுக்கு முதல்வர் நாராயணசாமி அனுப்பி வைத்தார்.  

வாரிய சேர்மன், இயக்குனர்கள் என மொத்தம் 42 பேர் அடங்கிய பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டது. இதனை பரிசீலனை செய்த கவர்னர் கிரண்பேடி, தலைமை செயலர் அஸ்வனிகுமாருக்கு அந்த பட்டியலை அனுப்பியுள்ளார். அனுமதி கேட்கும் வாரியங்களில் நிதிச்சூழல் எப்படி உள்ளது? ஏற்கனவே கடந்த ஆட்சியில் சேர்மன் நியமிக்கப்பட்டுள்ளனரா? அவர்கள் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கிறதா? என்பது உள்பட அதனுடைய தற்போதைய நிலைமை அனைத்தையும் அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தலைமைச்செயலருக்கு கவர்னர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார். மேலும் பட்டியலில் இடம்பெற்றுள்ள நபர்கள் மீது குற்றப்பின்னணி ஏதேனும் உள்ளதா? என்பதையும் குறிப்பிட்டு அனுப்புமாறு கூறியதாக தெரிகிறது.

இதனிடையே அனைத்து  விபரங்களும் அடங்கிய அறிக்கையை தலைமைச்செயலர் தற்போது கவர்னரிடம் சமர்ப்பித்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. எனவே பட்டியலில் இடம்பெற்றுள்ள அனைவருக்கும் கிரண்பேடி அனுமதி வழங்குவரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உறுதியாக இதற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என காங்கிரசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆட்சி காலம் நிறைவடைய இன்னும் ஒன்றரை ஆண்டுகளே இருப்பதால், இதனை இறுதி வாய்ப்பாக காங்கிரசார் கருதுகின்றனர். இன்னும் ஒருவாரத்தில் கவர்னர் தனது முடிவை தெரிவிப்பார் என கூறப்படுகிறது.

Related Stories: