×

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் எம்.ஆர்.ஐ. ஸ்கேன், ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்த பரிந்துரை

கோவை, பிப்.18: கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் ஆம்புலன்ஸ் வசதியை ஏற்படுத்த மத்திய அரசுக்கு கோவை எம்.பி. பி.ஆர்.நடராஜன் பரிந்துரை செய்துள்ளார். கோவை வரதராஜபுரம் பகுதியில் இ.எஸ்.ஐ. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் தொழிலாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்கள் அதிகளவில் பயன்பெறுகின்றனர். இந்த இ.எஸ்.ஐ. மருத்துவமனையை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக நேற்று கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவமனை முதல்வர் மற்றும் இருப்பிட மருத்துவ அதிகாரி, இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆலோசனை குழுவுடன் ஆலோசனை நடத்தினர்.

இது குறித்து பி.ஆர்.நடராஜன் எம்.பி. கூறியதாவது: கடந்த முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது மருத்துவக்கல்லூரி அமைய தொடர்ந்து முயற்சி மேற்கொண்டேன். இதன் பயனாக இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு புதிய கட்டிடங்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகள் உருவாகியுள்ளது. இதன் அடுத்த கட்டமாக அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ள மருத்துவமனையாக மாற்றுவதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறேன். தற்போது, மருத்துவமனைக்கு நவீன எம்.ஆர்.ஐ. ஸ்கேன் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பிலான ஆம்புலன்ஸ் வாகனம் ஆகிய வசதியை பெற மத்திய அரசிற்கு பரிந்துரை கடிதம் அளிக்கப்பட்டுள்ளது. இதனை  உடனடியாக பெற முயற்சி மேற்கொள்ளப்படும். மேலும், மருத்துவமனையில் உள்ள சிறு,சிறு குறைபாடுகள் குறித்து நோயாளிகள் மற்றும் ஊழியர்களிடம் கேட்டறிந்தேன். இது போல் மருத்துவமனை பணியாற்றும் தூய்மை பணியாளர்கள், காவலர்கள் ஆகியோருக்கு முறையாக ஊதியம் தராமல் உள்ள தனியார் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் குறித்தும் விவாதிக்கப்பட்டுள்ளது. இதனை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். இ.எஸ்.ஐ. மருத்துவமனை மேம்பாட்டு ஆலோசனைக்குழு உறுப்பினர் வேலுசாமி மற்றும் சிவஞானம், ரத்தினகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Tags : Coimbatore ISI MRI ,ambulance facility ,
× RELATED உதகை, கொடைக்கானல் பகுதிகளில் அவசர...