×

பள்ளி குழந்தைகளை பணிக்கு அமர்த்திய உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

கோவை, ஜன. 1: கோவை தொண்டாமுத்தூரில் பள்ளி குழந்தைகளை பணிக்கு அமர்த்திய உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கோவை தொண்டாமுத்தூர், காளியண்ணன்புதூர், புதூர், குளத்துப்பாளையம் மற்றும் வடிவேலம்பாளையம் பகுதிகளில் தங்கியுள்ள வடமாநில தொழிலாளர்களின், குழந்தைகள் உள்ளனர். இவர்கள், அப்பகுதி ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் படித்து வந்த நிலையில், பள்ளிக்கு செல்லாமல் பாக்கு உரிக்கும் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்பேரில், கோவை தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) சுபாஷ்சந்திரன் தலைமையில் தொழிலாளர் துறை அலுவலர்கள், பள்ளிக்கல்வி துறை, காவல் துறை, சைல்டுலைன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த நவம்பர் 20ம் தேதி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, வடமாநில தொழிலாளர்களின் 5 குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் பணிபுரிவது கண்டறியப்பட்டு மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட குழந்தைகள் உடனடியாக மாவட்ட குழந்தைகள் நலக்குழுமத்தில் ஒப்படைக்கப்பட்டனர். இக்குழந்தைகள் மீண்டும் பள்ளி படிப்பை தொடர அவர்கள் பயின்று வந்த பள்ளியில் சேர்க்கப்பட்டனர்.

அவர்களுக்கு மறுவாழ்வு நிதிபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குழந்தைகளை பணிக்கு அமர்த்திய உரிமையாளர் மீது தொழிலாளர் உதவி ஆய்வாளரால் கோவை தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களை எவ்வித பணியிலும் ஈடுபடுத்த கூடாது. குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தும் நிறுவனம் குறைந்தது ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது 2 வருட சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

14 வயதிற்கு மேற்பட்ட 18 வயது பூர்த்தியடைந்த வளரிளம் பருவத்தினரை அபாயகரமான தொழிலில் ஈடுபடுத்த கூடாது. மேலும், குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர் யாராவது பணி அமர்த்தப்பட்டு இருந்தால் அது தொடர்பாக பொதுமக்கள் சைல்டுலைன் 1098 மற்றும் pencil.gov.in என்ற இணைய தளத்தில் புகார் தெரிவிக்கலாம் என தொழிலாளர் உதவி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Tags : Coimbatore ,Thondamuthur, Coimbatore ,Thondamuthur ,Kaliyannanputhur ,Puthur ,Kulathupalayam ,Vadivelampalayam ,
× RELATED மாடியில் இருந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி