கோவை,ஜன.1:கோவை ரயில் நிலையத்தில் பாசஞ்சர் ரயில் நிறுத்த போதுமான இடம் ஒதுக்கவில்லை என பயணிகள் புகார் கூறி வருகின்றனர். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து அதிக வருவாய் தரக்கூடிய பிரதான ரயில் நிலையமாக கோவை இருக்கிறது. ஆனால் கட்டமைப்பு, பிளாட்பாரம், பார்க்கிங், பயணிகள் வசதிகளில் கோவை ரயில் நிலையம் மிக மோசமான நிலைமையில் இருக்கிறது.
பிளாட்பாரங்களில் ரயில் நகர்ந்தால் தான் அடுத்து ரயில் வந்து நிறுத்த முடியும் என்கிற பரிதாப நிலைமை தொடர்கிறது. ரயில் நிலையத்தில் 1 முதல் 6 பிளாட்பாரம் இருக்கிறது. இதில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் 1 முதல் 3 பிளாட்பாரங்கள் வழியாக வந்து செல்கிறது. பாசஞ்சர் மற்றும் காத்திருந்து செல்லும் ரயில்கள் 4 முதல் 6 வது பிளாட்பாரங்களில் நிறுத்தப்படுகிறது. கோவை மார்க்கமாக கேரளா மற்றும் வடமாநிலங்களுக்கு 60க்கும் மேற்பட்ட பயணிகள் ரயில்கள் வந்து செல்கிறது. தினமும் பல ஆயிரம் பயணிகள் கோவை ரயில் நிலையத்திற்கு வந்து செல்கிறார்கள். ஆனால் இட வசதி போதுமான அளவு கிடையாது. பிளாட்பாரங்களில் ரயில் பெட்டிகள் நிறுத்த போதுமான இட வசதி கிடையாது. பெரிய ரயில்களில் 22 முதல் 26 பெட்டிகள் வரை இணைக்கப்படுகிறது.
இந்த பெட்டிகள் பிளாட்பாரத்தின் கடைசி எல்லை தாண்டி நிறுத்த வேண்டியிருக்கிறது. வடமாநிலம் மற்றும் தொலை தூரம் செல்லும் ரயில்களில் கோவை ரயில் நிலையத்தில் தண்ணீர் நிரப்புதல் உள்ளிட்ட பணிகளை செய்ய முடியாத நிலையிருக்கிறது.காலை நேரத்திலும், மாலை நேரத்திலும் ரயில் நிலையத்திற்கு பல ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனர்.வாகனங்கள் நிறுத்த 30 சென்ட் பரப்பிற்கும் குறைவான இடம் மட்டுமே இருக்கிறது. பார்சல், புக்கிங் செய்ய வாகனங்கள் வந்து செல்ல போதுமான இடமில்லை, ரயில் நிலையத்திற்கு பிரதான ரோடாக ஸ்டேட் பாங்க் ரோடும், கூட் செட் ரோடும் இருக்கிறது. கடந்த பல ஆண்டாக இந்த இரண்டு ரோடுகளும் விரிவாக்கப்படவில்லை. ரயில்வேக்கு சொந்தமான இடங்கள், பிளாட்பாரத்தின் இரு பகுதியிலும் இருக்கிறது. இந்த இடத்தை மீட்க முடியவில்லை. ரயில் பெட்டி பராமரிக்க போதுமான இடவசதி செய்யவில்லை.
கோவை ரயில் நிலையத்தின் மேம்பாட்டிற்காக ஒன்றிய அரசின் ரயில்வே நிர்வாகம் எந்த திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. கடந்த 10 ஆண்டாக கோவை ரயில் நிலையம் அடிப்படை வசதிகளில் பின் தங்கிய நிலைமையில் இருக்கிறது.கூடுதல் பிளாட்பாரம், வாகனம் நிறுத்துமிடம் போன்றவற்றை நிறைவேற்றி தர வேண்டும். போத்தனூர், வட கோவை ரயில் நிலையங்களிலும் கூடுதல் பிளாட்பாரம் தேவை. கோவை ரயில் நிலையம் மிகுந்த இட நெருக்கடியில் இருக்கிறது. இந்த பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்றி ரயில் நிலையம் வந்து செல்ல பிரதான பாதையை உருவாக்க வேண்டும்.லங்கா கார்னர் பாலத்தில் மேம்பாலம் அமைக்க வேண்டும். குளத்தின் வழியாக கேரளாவிற்கு ரயில்கள் வந்து செல்லும் பாதையை விரிவாக்கம் செய்ய வேண்டும் என நீண்ட கோரிக்கை கிடப்பில் இருக்கிறது.
இதுகுறித்து பயணிகள் கூறுகையில், ‘‘ கோவை ஈரோடு பாசஞ்சர் ரயில் பிளாட்பாரத்தின் கடைசி பகுதியில் நிறுத்தப்படுகிறது. இந்த ரயிலை பிடிக்க அதிக தூரம் நடக்க வேண்டியுள்ளது. இட நெருக்கடியால் பிளாட்பாரத்தில் நிற்கும் ரயில் சென்ற பின்னால் தான் அடுத்த ரயில் வர வேண்டியிருக்கிறது. குறிப்பாக வடகோவை தாண்டி சில ரயில்கள் சிக்னலுக்காக நிறுத்தப்படுகிறது, ’’ என்றனர்.
