கே.வி.குப்பத்திற்குட்பட்ட ஐதர்புரம் கிராமத்தின் எல்லை பிரச்னையை தீர்க்க வேண்டும் பிடிஓவிடம் மனு

கே.வி.குப்பம், பிப்.18: கே.வி.குப்பத்திற்குட்பட்ட ஐதர்புரம் கிராமத்தில் உள்ள எல்லை பிரச்னையை தீர்க்க வேண்டும் என்று அப்பகுதியினர் பிடிஓவிடம் மனு அளித்தனர்.கே.வி.குப்பம் தாலுகாவுக்கு உட்பட்ட பசுமாத்தூர் ஊராட்சி ஐதர்புரம் கிராமத்தில் பாதி பகுதி கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியிலும், குடியாத்தம் சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர்.மேலும், ஒரே கிராமத்தின் ஓட்டுக்கள், இரு தொகுதிக்களுக்கும் பிரிகிறது. இதனால், முதியவர்கள் உட்பட பலரும் பாதிக்கப்படுகின்றனர். ஒரே கிராமப்பகுதியை சுற்றி அணைக்கட்டு, கே.வி.குப்பம் மற்றும் குடியாத்தம் போன்ற மூன்று தொகுதிகளின் எல்லை முடிகிறது.இதனால், அந்த கிராமத்தில் விபத்தோ அல்லது வேறு ஏதாவது நிகழ்வுகள் ஏற்பட்டால், காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றாலும், அரசு துறை அதிகாரிகளிடம் மனு அளிக்க சென்றால், உங்களின் பகுதி குடியாத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது. எனவே, நீங்கள் அங்கு சென்று தெரிவிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதனால், அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் பலர் அங்கும், இங்குமாக அலைந்து பல சிரமங்களுக்கு ஆளாகின்றனர். எனவே, ஐதர்புரம் கிராமத்தை பசுமாத்தூர் ஊராட்சியிலிருந்து பிரித்து, கே.வி.குப்பம் எல்லைக்குள் முழுமையாக கொண்டு வர வேண்டும்.மேலும், ஐதர்புரம் கிராமத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க வேண்டும். இதனால், எதிர்காலத்தில் வரும் பிரச்னைகளை தவிர்க்க முடியும் என்று அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று கே.வி.குப்பம் பிடிஓ ரமேஷ்குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

Related Stories: