செய்யாறு, ஆரணியில் 2,525 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் அமைச்சர், எம்எல்ஏ வழங்கினர்

செய்யாறு, பிப். 11: செய்யாறில் ₹32.16 லட்சம் மதிப்பில் 818 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை அமைச்சர் மற்றும் எம்எல்ஏ நேற்று வழங்கினர்.செய்யாறு அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் இலவச சைக்கிள் வழங்கும் விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ கே.மோகன் தலைமை தாங்கினார் மாவட்ட கல்வி அலுவலர் செல்வராஜ் வரவேற்றார் ஆர்டிஓ கி.விமலா, தாசில்தார் மூர்த்தி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், மற்றும் எம்எல்ஏ தூசி கே.மோகன் ஆகியோர் ₹19.22 லட்சம் மதிப்பில் 498 மாணவிகளுக்கும், செய்யாறு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் ₹12. 94 லட்சம் மதிப்பீட்டில் 320 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை ஆகியோர் வழங்கினர்.

அப்போது, அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் பேசியதாவது: மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்த திட்டங்கள் அனைத்தையும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி செயல்படுத்தி வருகிறார். 30 ஆண்டு காலம் செய்ய வேண்டிய திட்டங்களை கடந்த மூன்று ஆண்டுகளில் திறம்பட செயல்படுத்தி உள்ளார்.கடந்த ஆண்டு கல்வித்துறைக்கு மட்டும் ₹29 ஆயிரத்து 700 கோடி ஒதுக்கி பல்வேறு வளர்ச்சிகளை கல்வித்துறையில் கொண்டு வந்துள்ளார். கல்வித்துறை மட்டுமல்லாது அனைத்து துறைகளிலும் முன்னோடித் திட்டங்கள் வகுத்து மக்களுக்காகவே செயலாற்றி வருகிறார்.மாணவர்களுக்காக எவ்வளவு சலுகைகள் அரசு தந்தாலும் மாணவர்களாகிய நீங்கள் கண்ணும் கருத்துமாக படித்து வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும். அதனால் சமுதாயம் சீர் பெற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி வளர்ச்சி குழு நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள், அரசுத்துறை அதிகாரிகள் அதிமுக பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர்.

ஆரணி: ஆரணி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர், முள்ளண்டிரம், அக்ராபாளையம், இரும்பேடு, எஸ்.வி.நகரம் ஊராட்சிகளில் உள்ள மேல்நிலைப் பள்ளிகள், ஆரணி டவுன் அரசு ஆண்கள், பெண்கள் மேல்நிலைப் பள்ளி, சுப்பிரமணிய சாஸ்திரியர் மேல்நிலைப் பள்ளி உட்பட 9 பள்ளிகளில் படிக்கும் 1,707 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது.நிகழ்ச்சிக்கு, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கினார். எம்எல்ஏ தூசி கே.மோகன், ஆர்டிஓ மைதிலி, மேற்கு ஆரணி ஒன்றியக்குழு தலைவர் பச்சையம்மாள் சீனிவாசன், மாவட்ட கல்வி அலுவலர் சம்பத் முன்னிலை வகித்தனர். பள்ளி துணை ஆய்வாளர் பாபு வரவேற்றார். இதில் அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், ₹67.13 லட்சம் மதிப்பில் 1,707 மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி பேசினார்.இதைத்தொடர்ந்து, ஆரணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர், ஆதனூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ₹10.87 லட்சம் மதிப்பில் புதிய நுழைவு வளைவுகளை அமைச்சர் திறந்து வைத்தார்.இதில் தாசில்தார் தியாகராஜன், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராசன், அறங்காவலர் குழு தலைவர் ஜோதிலிங்கம், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மகேஸ்வரி, கருணாகரன், அந்தோணி மரியசெல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: