மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

ஊட்டி, பிப். 11: நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் ரேஷன் கார்டு, வீட்டு மனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 150 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.  இதையடுத்து மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். மேலும், கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறை ரீதியான அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் 44 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.2.79 கோடி மதிப்பில் கடனுதவி, சமூக பாதுகாப்பு திட்டம் சார்பில் இந்திராகாந்தி மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய தேசிய திட்டம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதிய திட்டம், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய திட்டம், தற்காலிக இயலாமை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இந்திரா காந்தி தேசிய விதவை உதவித்தொகை ஆகிய திட்டத்தின் கீழ் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் வட்டத்தைச் சேர்ந்த 39 பயனாளிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.1000 பெறுவதற்கான ஆணைகளை கலெக்டர் வழங்கினார்.  நீலகிரி வன கோட்டத்தில் பணிபுரியும் லலிதா என்பவர் தமிழ்நாடு வனத்துறை (கோவை மண்டலம்) சார்பில் நடத்தப்பட்ட 25வது மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றதற்காக கிடைத்த பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட கலெக்டரிடம் காண்பித்து வாழ்த்து பெற்றார்.   இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) கண்ணன், உதவி ஆணையர் (கலால்) பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் கணேஷ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் முகம்மது குதுரதுல்லா மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: