மாநில டேபிள் டென்னிஸ் போட்டி பட்டிவீரன்பட்டி மாணவர்கள் தங்கம்

பட்டிவீரன்பட்டி, பிப்.7: பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி மெட்ரிக் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வரும் தருண்விஜய், தருண்ராஜன் ஆகிய மாணவர்கள் 14 வயதுக்குட்பட்டோருக்கான முதலாவது மாநில அளவிலான டேபிள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை புரிந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களைச் சேர்ந்த 32 அணிகள் பங்கேற்ற 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மாநில அளவிலான குடியரசு தின குழு விளையாட்டு போட்டிகள் பள்ளிக் கல்வித்துறை சார்பில் நடைபெற்றது.இதில் இரட்டையர் டேபிள்டென்னிஸ் போட்டியில் திண்டுக்கல் அணி சார்பில் பங்கேற்ற தருண்விஜய், தருண்ராஜன் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டியில் மதுரை அணியை வென்று முதலிடம் பிடித்து தங்கப்பதக்கமும், கோப்பையும் பெற்றனர். முன்னதாக இவர்கள் காலிறுதியில் ஈரோடு அணியையும், அரையிறுதியில் சென்னை அணியையும் வென்றனர்.இதில் பங்கேற்ற தருண்விஜய் மார்ச் மாதம் அந்தமான் நிக்கோபார் தீவுகளில் ஆசிய அளவில் நடைபெற உள்ள ஆசியாபசிபிக் பெடரேசன் 2020 கோப்பைக்கான டேபிள்டென்னிஸ் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட இந்திய சப்-ஜூனியர் அணியில் விளையாட தேர்வாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.மாநில அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற இம்மாணவர்களை இந்து நாடார்கள் உறவின்முறை சங்க தலைவர் ராஜாராம், செயலர் சங்கரலிங்கம், பள்ளி தலைவர் கருணாகரன், செயலர் பிரசன்னா, பள்ளி முதல்வர் ஆத்தியப்பன் ஆகியோர் பாராட்டி பரிசுகள் வழங்கினர்.

Related Stories: