29ம் தேதி வரை பொதுமக்கள் பார்வையிலான கணக்கெடுப்பு

புதுச்சேரி, பிப். 4: புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி டெவலெப்மெண்ட் நிறுவனத்தின் முதன்மை செயலதிகாரி (சிஇஓ) அர்ஜூன் சர்மா நிருபர்களுக்கு அளித்த பேட்டி:  மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம், பொதுமக்களின் வாழ்க்கை சூழலை எளிதாக்கு்ம நோக்கில் நகர மக்களின் வாழ்வாதாரங்களை தேசிய அளவில் பல்வேறு குறியீடுகளை கொண்டு அளவீடு செய்வதற்காக எளிதான வாழ்க்கை சூழல் (Ease of Living) என்னும் முயற்சியை மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் நகரங்களின் வாழ்க்கை தரத்தை தேசிய அளவிலான குறியீடுகள் அடிப்படையில் ஆய்வு செய்து நகர்ப்புற திட்டமிடுதல் மற்றும் மேலாண்மையை மேம்படுத்த உத்

தேசிக்கப்பட்டுள்ளது.

 இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற மக்களின் வாழ்க்கை தரம், கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம், பொருளாதாரம், மாசுக்கட்டுப்பாடு, திட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் வழங்குதல், போக்குவரத்து, மின்சாரம், வீட்டு வசதி போன்ற பல்வேறு அடிப்படை வசதிகள் குறித்த விவரங்கள் ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு பெறப்படும் தகவல்கள் நகர்ப்புற திட்டங்களை பயனுள்ள வகையில் வடிவமைக்கவும், சிறப்பான முறையில் கண்காணிக்கவும் ஏதுவாக அமையும்.

 நகரங்களின் வளர்ச்சி மற்றும் குறிப்பிட்ட தேவைகளின் அடிப்படையிலான வளர்ச்சி ஆகியவற்றில் குடிமக்களின் பங்களிப்பு மற்றும் முடிவுகள் தான் முக்கிய அங்கம் வகிக்கிறது. எனவே, புதுச்சேரி நகரத்தின் வளர்ச்சிக்காக பொதுமக்களின் கருத்துகளை பதிவு செய்யும் நோக்கில் பொதுமக்களின் பார்வையிலான கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பொதுமக்கள் (https:eo12019.org/citizenfeedback) என்ற இணையதளம் மற்றும் சமூக வலைதளம், மொழிக்குறியீடு கட்டம் (QR Code) ஆகியவற்றின் மூலம் தங்களின் கருத்துகளை பதிவு செய்யலாம். கடந்த 1ம் தேதி தொடங்கி இந்த கணக்கெடுப்பு வரும் 29ம் தேதி வரை நடக்கிறது. இதுகுறித்து விழிப்புணர்வு மற்றும் இணையதள, சமூகவலைதள முகவரிகள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் விளம்பரப்படுத்தப்படும். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகளின் அடிப்படையில் திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும். எனவே, பொதுமக்கள் புதுச்சேரி வளர்ச்சிக்காக தங்களது கருத்துகளை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 மேலும், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுவையில் மின்மாற்றிகள் மாற்ற ரூ.11 கோடி ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இதற்காக விரைவில் பணிகள் துவங்கும். அதேபோல், மாதிரி கழிவறைகள் மற்றும் புது கழிவறைகள் கட்டுவதற்கு ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. ஜிஐஎஸ் மேப்பிங் முறை கொண்டுவர உள்ளோம்.  இதன் மூலம் சொத்து வரி தண்ணீர் வரி, மின் கட்டணம் உள்ளிட்டவை எங்கு கட்ட வேண்டும் என்பதை எளிதாக அறிந்து

கொள்ளலாம்.

 மேலும், நவீன போக்குவரத்து திட்டம் கொண்டுவரவும், அரசு கட்டிடங்களில் சோலார் பேனர் பொருத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சைக்கிள் ஷேரிங் திட்டத்தின் கீழ் 10 இடங்களில் சைக்கிள் ஸ்டேண்ட் அமைத்து, முதற்கட்டமாக 200 சைக்கிள் விட உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது இணை செயலதிகாரி மாணிக் தீபன், பொது மேலாளர் தாமரை புகழேந்தி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: