பழநி- புது தாராபுரம் சாலையில் ரயில்வே கேட் பழுதால் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

பழநி, ஜன. 28: பழநி- புது தாராபுரம் சாலையில் ரயில்வே கேட் பழுதால் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. திருச்செந்தூரில் இருந்து பாலக்காடு நோக்கி பயணிகள் ரயில் நேற்று இரவு 7.30 மணியளவில் பழநி வந்தது. இந்த ரயிலுக்காக பழநி- புது தாராபுரம் சாலை ரயில்வே கேட் மூடப்பட்டது. ஆனால் ரயில் கடந்தும் கூட கேட் திறக்க முடியவில்லை. திறக்கும் கம்பி அறுந்ததால் கேட் திறப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால் சாலையின் இருபுறமும் 2 கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து வந்த ரயில்வே ஊழியர்கள் பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

ஆனால் ஒரு மணிநேரமாகியும் சரிசெய்ய முடியவில்லை. பின்னர் ஒருவழியாக ஒன்றரை மணிநேரம் கழித்து பழுதை சரிசெய்து கேட்டை திறந்தனர். அதன்பிறகும் போக்குவரத்து சீராக அரை மணிநேரம் ஆனது. இதனால் பழநி- புது தாராபுரம் சாலையில் சுமார் 2 மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்து போனது. இந்த ரயில்வே கேட்டிற்கு மேம்பாலம் அறித்து முதல்வர் 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இதற்கான பூர்வாங்க பணிகள் இதுவரை துவங்கவில்லை. எனவே ரயில்வே கேட்டில் மேம்பால அமைக்கும் பணியை விரைவில் துவங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: