சாலை போக்குவரத்து வார விழா

திருப்பூர்,ஜன.24: திருப்பூரில் சாலை போக்குவரத்து வார விழாவில் தலைக்கவசம் அணியாமல் வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு பள்ளி மாணவிகள் நேற்று மலர் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். சாலை பாதுகாப்பு வார விழா தமிழகம் முழுவதிலும் போக்குவரத்து துறைகள், போலீசார் ஆகியோரின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளுடன் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த விழாவில் சாலையில் வாகனம் ஓட்டும்போது பாதுகாப்பாக செல்ல வேண்டும். செல்போன் பேசி கொண்டே வாகனங்களை இயக்கக்கூடாது. இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் தலைகவசம் அணிய வேண்டும். நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வுகள் அடங்கிய கலை நிகழ்ச்சிகளும், விழிப்புணர்வு பேரணிகளும் நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகர போலீஸ் சார்பில் போலீசார் மற்றும் பொதுமக்கள் தலைகவசம் அணிந்து வாகன பேரணி சென்றனர். இந்த வாகன பேரணி குமார் நகர் பழைய ஆர்.டி.ஒ. அலுவலக வளாகத்திலிருந்து புறப்பட்டு புஸ்பா தியேட்டர் பஸ் நிறுத்தத்தில் முடிவடைந்தது. இந்த பேரணியை மாநகர போலீஸ் துணை கமிஷ்னர் பத்ரி நாராயணன் துவங்கி வைத்தார். இந்த பேரணியின் முடிவில் புஸ்பா சிக்னலில் தலைகவசம் அணியாமல் வந்த  இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கு மாணவ, மாணவிகள் மலர் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியில் வடக்கு உதவி கமிஷ்னர் வெற்றிவேந்தன், போக்குவரத்து உதவி கமிஷ்னர் கஜேந்திரன், வடக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன், உள்ளிட்ட பொதுநல அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Related Stories: