காட்பாடி அருகே மூதாட்டி கொலையில் திருப்பம் சொத்து தகராறில் உறவினரே கொலை செய்தது அம்பலம் முன்னாள் ராணுவவீரர் கைது, மற்ற 2 பேருக்கு வலை

வேலூர், ஜன.24: காட்பாடி அருகே மூதாட்டி கொலையில் திடீர் திருப்பமாக சொத்து தகராறில் உறவினரே கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மேலும் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர். காட்பாடி அடுத்த லத்தேரி அருகே உள்ள சென்னாரெட்டியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணய்யா. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். இவரது மனைவி சரோஜா(70). இவருக்கு குழந்தை இல்லை என்பதால் உறவினரான ரவிச்சந்திரனை வளர்ப்பு மகனாக தத்தெடுத்து வளர்ந்து வந்தார். இதையடுத்து வயதுமுதிர்வு காரணமாக சரோஜாவை ரவிசந்திரன் பராமரித்து வந்தார். இந்நிலையில் ரவிச்சந்திரன் கடந்த வாரம் கீழ்முட்டுகூரில் நடைபெற்ற மாடுவிடும் திருவிழாவை காண்பதற்காக குடும்பத்துடன் அங்குள்ள உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர் மாலை 5.30 மணியளவில் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது சரோஜா தலையின் பின்பக்கத்தில் அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும் அவர் அணிந்திருந்த 5 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ரவிச்சந்திரன் லத்தேரி போலீசில் புகார் செய்தார்.

Advertising
Advertising

அதன்பேரில் எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வந்தனர். மேலும் சொத்துக்காக உறவினர்களே கொலை செய்தனரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தினர். இந்நிலையில் போலீசார் கொலை நடந்த அன்று அப்பகுதியில் நடந்த செல்போன் உரையாடல்களை ஆய்வு செய்தனர். அப்போது சரோஜா வளர்ப்பு மகனாக ரவிசந்திரனின் தந்தையான முன்னாள் ராணுவவீரர் தேவராஜை கொலை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை நேற்று கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கொலை செய்யப்பட்ட சரோஜாவுக்கு குழந்தைகள் இல்லை. இதனால் தனது உறவினரான தேவராஜின் மகனான ரவிசந்திரனை தத்தெடுத்து வளர்த்துள்ளார். இதில் ரவிசந்திரனுக்கு மட்டும், சரோஜா 3 ஏக்கர் நிலத்ைத எழுதி வைத்துவிட்டாராம். தேவராஜின் மற்ற 2 மகள்களுக்கு சொத்து கொடுக்கவில்லையாம். இதனால் தேவராஜூக்கும், சாரோஜாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்றும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த தேவராஜ், உறவினர்கள் 2 பேருடன் சேர்ந்து சரோஜாவை அடித்து கொலை செய்துள்ளனர். தேவராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். மற்ற 2 பேரை தேடி வருகிறோம். இவ்வாறு கூறினர்.

Related Stories: