கேரளாவில் நடந்த கொலை பந்தலூர் அருகே கொலையாளி வீட்டில் கேரள போலீசார் அதிரடி விசாரணை

பந்தலூர்,  ஜன.23: கேரளா மாநிலம் முக்கம் பகுதியில் வசித்து வந்தவர் பிர்ஜூ (53). இவர்  கடந்த 2014ம் ஆண்டு சொத்து தகராறு காரணமாக தனது தாய் ஜெயவல்லியை கொலை  செய்தார். இதற்காக கூலிப்படை சேர்ந்த மலப்புரம் இஸ்மாயில் (47) என்பவரை  பயன்படுத்தியுள்ளார். அவருக்கு ரூ.10 லட்சம் தருவதாக பிர்ஜூ கூறியுள்ளார்.  இருவரும் சேர்ந்து ஜெயவல்லியை கழுத்தை நெரித்து கொன்று சீலிங்பேனில் தொங்க  விட்டுள்ளனர். இதையடுத்து 2 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.  இதனால் கேரளாவில் இருந்து தப்பிய பிர்ஜூ நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பொன்னானி புளியாடி பகுதிக்கு வந்து  சொந்தமாக வீடு வாங்கி தனது மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் குடியேறினார். இந்நிலையில் இஸ்மாயிலுக்கு பிர்ஜூ பணம் கொடுக்காமல் தாமதப்படுத்தி  வந்துள்ளார். எனவே ஜெயவல்லியை கொன்றது குறித்து வெளியில் சொல்லிவிடுவதாக இஸ்மாயில்  மிரட்டியதாக தெரிகிறது. எனவே இஸ்மாயிலை கொலை செய்ய பிர்ஜூ திட்டமிட்டார். கடந்த 2017ம் ஆண்டு இஸ்மாயிலை கொலை செய்த பிர்ஜூ பல துண்டுகளாக வெட்டி பல இடங்களில்  வீசினார்.

பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை தொடர்பாக கோழிக்கோடு தனிப்பிரிவு ஏ.டி.ஜி.பி.  டோமின் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.அப்போது புளியாடி பகுதியில் பிர்ஜூ தலைமறைவாக இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து பிர்ஜூவை கடந்த 16ம் தேதி கேரளா போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் விசாரணைக்காக கேரளாவிற்கு அழைத்து சென்றனர்.  இந்த நிலையில் நேற்று  தனிப்பிரிவு  டி.எஸ்பி.  பினோய்  தலைமையிலான போலீசார் மற்றும் கைரேகை நிபுனர்கள் புளியாடிக்கு வந்தனர். பிர்ஜூவையும் அவர்கள் உடன் அழைத்து வந்தனர். பிர்ஜூவின் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கு வைத்து பிர்ஜூவிடம் விசாரணை நடத்தினர். பின்னர்  சோதனை நடத்தி பிர்ஜூ கொலைக்காக பயன்படுத்திய பைக் மற்றும் கைரேகை பதிவுகளையும் கேரளா போலீசார் எடுத்து சென்றனர்.

Related Stories: