பேளுக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இன்றி பொதுமக்கள் அவதி

சேந்தமங்கலம், ஜன.23: பேளுக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லாததால்  பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். சேந்தமங்கலம் ஒன்றியம் பேளுக்குறிச்சியில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். தினசரி பள்ளி மாணவ, மாணவிகள்  மற்றும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வரும் ஏராளமானோர் ராசிபுரம், நாமக்கல், காளப்பநாயக்கன்பட்டி ஆகிய பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும், கொல்லிமலை, ஐந்துநாடு ஆகிய பகுதிகளில் விளையும் பொருட்களை, விவசாயிகள் தலைச்சுமையாக பழனியப்பர் கோயில் வழியாக பேளுக்குறிச்சிக்கு கொண்டு வந்து, பின்பு பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்கு பஸ்களில் கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில், பேளுக்குறிச்சி பஸ் ஸ்டாப்பில் நிழற்கூடம் இல்லாததால், பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். வெயில் மற்றும் மழை காலங்களில் அருகில் உள்ள கடைகளுக்குள் சென்று நிற்கும் நிலை உள்ளது. கர்ப்பிணிகள், முதியவர்கள் சாலையில் நின்று சிரமப்படுகின்றனர். காலை, மாலை நேரத்தில் பள்ளி மாணவ, மாணவிகள் உட்கார இடமின்றி, சாலையில் பாதியளவுக்கு நிற்கும் அவலம் காணப்படுகிறது. இதுகுறித்து பல ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மாவட்ட  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊர்பொதுமக்கள் சார்பில் மனு அனுப்பியுள்ளனர்.

Related Stories: